மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

By Maha

இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் அங்கு மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

சரி, இப்போது அந்த மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Chicken Kuzhambu - Madurai Munniyandi Vilas Style

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தேங்காய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

வரமிளகாய் - 6
மல்லி - 1 டீஸ்பூன்
பச்சரிசி - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
காய்ந்த தேங்காய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து 5-8 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் மிதமான தீயில் குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி மூடி வைத்து இறக்கினால், மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி!!!

Image Courtesy: naliniscooking

Story first published: Saturday, September 5, 2015, 14:23 [IST]
Desktop Bottom Promotion