For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விகடகவி தெனாலி ராமனின் வேடிக்கையான கதைகளும் ! அவரின் சோகமான முடிவும்!!

எத்தனையோ கோமாளித்தனமும், அறிவு பொதிந்த செய்கைகள் கொண்ட தெனாலி ராமனின் வேடிக்கையான கதைகளும் அவரின் சோகமான முடிவும் இங்கே சொல்லப்பட்டுள்ளது

By Gnaana
|

பிறந்த சிலநாட்களில் தந்தையை இழந்து, அதன்பின் வறுமையில் உழன்று, பின் மாமன் வீட்டில் வளர்ந்தவர் தெனாலிராமன். இளமையிலே படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தான். இருப்பினும், மற்றவரை சிரிக்கவைக்கும் ஆற்றலால், உடன் உள்ள சிறுவர்களை அவ்வப்போது தனது கோமாளித் தனங்களால் சிரிக்க வைப்பதில் சமர்த்தராக இருந்தார். அவை சேட்டைகளாக இருந்தாலும், அவற்றில் இருந்த அறிவுக்கூர்மையான விகடநுட்பம் எல்லோரையும் கவர்ந்தது.

எதையும் எதிர்பார்க்காதே!!!

இவரின் நகைச்சுவையை கண்ட ஒரு துறவி, காதில் ஒரு மந்திரம் சொல்லி, இதை உச்சரித்துக்கொண்டே இரு, காளிதேவியின் வரம் கிடைக்கும் என்று கூற, அதன்படியே காளியின் தரிசனம் கிடைக்கப்பெற்று, காளிதேவியையே தன் மதிநுட்பத்தால் சிரிக்கவைத்து, விகடகவி பட்டம் பெற்றதாக கதைகளில் அறியமுடிகிறது.

இப்படிப் பெற்ற வரம் தந்த நம்பிக்கை காரணமாக, விஜயநகரை ஆண்டுவந்த கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் நுழைந்து, மன்னரின் நம்பிக்கையைப் பெற்று அரசவைப்புலவராக, விகடகவியாக இருந்தார்.

Stories of Tenali Raman

அப்போது அரசவையில், அவர் நிகழ்த்திய நிகழ்வுகள், படிக்கப்படிக்க திகட்டாதவை, அவை, அரசரை மனமகிழ சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நீதி போதனைகளாகவும் இருந்தது. அவர் சொல்ல வந்த கருத்தை, சிறு சம்பவங்கள் மூலம் சிரிக்கவைத்து, அதன் பின் எல்லோரும் பொருள் உணர்ந்து, அவர் சொல்ல வந்ததை ஒப்புக்கொள்ளும் வகையில் அவருடைய புலமை இருந்தது.

கதை -1 :

இப்படித்தான் ஒருநாள், அரசவையில், மன்னர் கிருஷ்ணதேவராயர் பிறந்த நாள் விழா, ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்கள், வணிகர்கள்,பொதுமக்கள் எல்லோரும் அவரவர் நிலைக்கேற்ப பரிசுகளை மன்னரிடம் சமர்ப்பித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில், தெனாலிராமரும் இருந்தான்.

அவர் மன்னரிடம் சென்று, கொண்டு வந்திருந்த மிகப்பெரிய பரிசுப்பொட்டலத்தை சமர்ப்பித்தபோது, மன்னரும் எல்லோரையும் போல அதில் என்ன இருக்கிறது என்றறிய ஆவல் கொண்டு, தெனாலிராமரிடம், பொட்டலத்தை பிரிக்கச் சொல்ல, அவரும் பிரித்தார்.

மேலே உள்ள தாள்களையும், இலைகளையும் பிரிக்கப்பிரிக்க உள்ளே வெவ்வேறு வடிவங்களில் சிறுசிறு பொட்டலங்கள் வந்துகொண்டே இருந்தன, அவையோர் எல்லாம் மன்னர் உட்பட, அப்படி என்ன பரிசு அதனுள் இருக்கிறது என்று அறிய ஆவல் கொண்டு அவர் பிரிப்பதையே, ஆர்வத்துடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர்.

கடைசியில் ஒரு சிறிய பெட்டியை தெனாலிராமன் பிரிக்க அதனுள் இருந்து நன்கு பழுத்த ஒரு சிறு புளியம்பழம். எல்லோரும் ஏளனமாகச் சிரித்தனர்.
அடச்சே, இதற்குதான் இத்தனை ஆர்ப்பாட்டமா எனச் சிலரும், எத்தனை தைரியம் இருந்தால் மன்னரின் பிறந்த நாளில் அவரை ஏளனப்படுத்துவது போல, புளியம்பழம் கொடுத்திருப்பான, மன்னர் என்ன தண்டனை விதிக்கப்போகிறாரோ என எல்லோரும் பதைபதைப்புடன் மன்னரைப் பார்த்தனர்.

மன்னர் அமைதியாக " தெனாலி! எதற்காக இந்தப் புளியம்பழம்" என்று கேட்க, தெனாலிராமன் அமைதியாக " மன்னா, நாடாளும் அரசர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது இந்தப் புளியம்பழம் ஒன்றுதான், எனவே தான் தங்களுக்கு இதனை பரிசளித்தேன்" என்றான்.

" அப்படி என்ன தத்துவம், இந்தப் புளியம்பழத்தினுள்" என அரசர் கேட்டார்.

"மன்னா!! மன்னர் என்பவர், உலகம் என்னும் புளியமரத்தில் காய்க்கும் புளியம்பழத்தைப்போல இனிமையானவராக இருக்கவேண்டும், அதேநேரம், ஆசாபாசங்கள் எனும் பந்தத்தில் ஒட்டாமல், புளியம்பழம் ஓட்டினுள் ஒட்டாமல் இருப்பதுபோல இருங்கள் என உணர்த்தவே, புளியம்பழம் பரிசளித்தேன்" என்றான்.

அவையோர், தெனாலியின் சமயோசிதபுத்தியை எண்ணி ஆரவாரத்துடன் கைதட்டினர். மன்னர் கண்கள் கலங்க சிம்மாசனத்தை விட்டு இறங்கி, தெனாலியை ஆரத்தழுவி "என் கண்களைத் திறந்துவிட்டாய்.. மன்னனுக்கு எதற்கு இத்தனை ஆடம்பரமான பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அனைத்தையும் உடனே நிறுத்துங்கள், அரச சொத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீண் செலவு செய்துவிட்டேனே, இனி பிறந்தநாளில் திருக்கோவில்களில் அர்ச்சனைமட்டும் செய்யுங்கள் போதும் என உத்தரவிட்டார். அவையோர் அனைவரும், தெனாலியின் தைரியத்தையும், புத்தி சாதுரியத்தையும் வியந்து பாராட்டினர்.

தெனாலிராமனின் வாக்கு சாதுர்யத்தினால், வெளியூர் தத்துவஞானியை தெறித்து ஓடச்செய்த கதையை இனி காணலாமா!

கதை- 2 :

ஒருமுறை ஒரு மிகப்பெரிய பண்டிதர் கிருஷ்ணதேவராயர் அவைக்கு வந்தார், அவரை வாதில் எவரும் வென்றதில்லை, அரசவையில் உள்ள மிகப்பெரிய பண்டிதர்கள்கூட, அவரைக் கண்டு அஞ்சிநடுங்கினர்.

அதைக்கண்ட நம் ஹீரோ தெனாலி எழுந்து, பண்டிதரே நான் தயார் உம்மிடம் வாதாட, நாளை வாரும் எனக்கூற, அரசர் முதல் அத்தனை பேரும் மகிழ்ந்தனர், இருந்தாலும் மெத்தப்படித்த அந்த பண்டிதரை எப்படி வெல்வான் தெனாலி என ஐயமும் கொண்டனர்.

மறுநாள் அவைக்கு தெனாலி, மிகப்பெரிய பண்டிதர்போல ஆடைஆபரணங்கள் எல்லாம் அணிந்து, கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்டிருந்த ஒரு ஏட்டுச் சுவடியுடன் வந்தான்.

எல்லாம் கற்றறிந்ததாக ஆணவச்செருக்குமிக்க அந்த பண்டிதர் இதனைக் கண்டார். அது எந்தநூலாக இருக்கும் என எண்ணி தெனாலியிடம் கேட்க, அவன் படு அசால்ட்டாக அவரை நோக்கி, இது "திலகாஷ்ட மகிஷ பந்தனம்" எனும் அரியநூல். இதன் மூலம்தான் உம்மிடம் வாதிடப்போகிறேன் எனக் கம்பீரமாகக் கூற, பண்டிதர் அதிர்ந்து, எத்தனையோ நூல்கள் படித்திருந்தாலும், இந்தநூலை இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை, அந்தநூலின் சாரம் என்னவென்றே அறியாமல், அதிலிருந்து தெனாலி கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் எப்படி பதில்சொல்ல முடியும், முதல்முறையாக வாதத்தில் தோற்றுவிடுவோமோ எனும் அச்சத்தில், மெதுவாக, நாம் நாளை வாதத்தைத் தொடங்கலாம் என்று கூறிச் சென்றுவிட்டார். அன்றிரவே ஊரைவிட்டே, ஓடியும்விட்டார்.

மறுநாள் அவையில் அனைவரும் பண்டிதர் ஓடிவிட்டத் தகவல் அறிந்து, ஈசியாக வாதில் வென்ற தெனாலியைக்கட்டிக்கொண்டு குதூகலித்தனர், மன்னர் வெகுவாக மகிழ்ந்து அவனிடம், அது என்ன நூலப்பா, உன் கையில் இருந்தது? நானும் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே, எங்கே அந்த நூலைக்காட்டு" எனக் கேட்டார்.

தெனாலி பட்டுத்துணியை விலக்க, அதனுள் எள், விறகு மற்றும் எருமை மாடுகளைக் கட்டும் கயிறு இருந்தது. தெனாலி " மன்னா, தில என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை மாட்டைக் கட்டும் கயிறு இதைத்தான் நான் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்" என உட்பொருள் கொண்டு பண்டிதரிடம் சொன்னேன். அதனை அறியாத அவர், இதுவரை தான் அறியாத மிகப் பெரிய நூல் என எண்ணி தோல்விக்குப் பயந்து ஓடிவிட்டார் எனச் சிரித்தான். மீண்டும் ஒருமுறை தனது சமயோசித புத்தியால் கிருஷ்ணதேவராயர் மனம் கவர்ந்தான் தெனாலி, மற்றவர்களும் வியந்தனர்.

இப்படி விகடகவியாக, எல்லோருக்கும் மன உற்சாகத்தை அளித்த தெனாலியின் கடைசி காலம் அவன் போற்றிய மன்னரை அவன் காண விரும்பியும் அவர் அதை நம்பாமல், அவன் இறந்துபோனான்.

ஒருமுறை தான் இறந்ததாக செய்தியைப் பரப்பி, தான் இறந்துவிட்டால் தன் குடும்பத்தை அரசர் கவனித்துக்கொள்ள மாட்டார் என உணர்த்திவிட்டான் தெனாலி. அதனால், அரசரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

பின்னர் உண்மையிலேயே தெனாலி பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருக்கிறான் உங்களைப் பார்க்கத் துடிக்கிறான் என்றபோதும் அவர் நம்பவில்லை. நேசித்த மன்னரை, கடைசியில் காணாது, மாண்டுபோனான் தெனாலி. விளையாட்டு வினையானது.

Read more about: life வாழ்க்கை
English summary

Stories of Tenali Raman

Stories of Tenali Raman
Desktop Bottom Promotion