1 கப் ரவை இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட..

Posted By:

Rava Masala Adai Dosa Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை இருந்தால், அந்த ரவையைக் கொண்டு காய்கறிகளை சேர்த்து அருமையான சுவையில் மசாலா அடை தோசையை செய்து சாப்பிடுங்கள். இந்த அடை தோசை சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை சாப்பிட மறுப்பவரானால், அவர்களுக்கு இப்படி காய்கறிகளை சேர்த்து அடை தோசை செய்து கொடுங்கள். இதனால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த அடை தோசைக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Rava Masala Adai Dosa How To Make a Rava Masala Adai Dosa Recipe

உங்களுக்கு ரவா மசாலா அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா மசாலா அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு

அடைக்கு...

* கோதுமை மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு

மேலே தூவுவதற்கு...

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அத்துடன் ரவை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ரவையை கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பின் அதில் கோதுமை மாவு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து, பின் துருவிய கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, ஆப்ப சோடா, கொத்தமல்லியை சேர்த்து நன்கு அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள அடை மாவை எடுத்து தோசை போன்று ஊற்றி, மேலே மிளகாய் தூள் கலந்து வைத்துள்ள வெங்காயத்தை சிறிது தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா மசாலா அடை தோசை தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Monday, December 22, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion