மணமணக்கும்.. கறிவேப்பிலை பூண்டு குழம்பு - இத ஒருடைம் செஞ்சா.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்..

Posted By:

Karuveppilai Poondu Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகமாக உள்ளதா? அந்த கறிவேப்பிலையை தூக்கி போட மனமில்லையா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையுடன், பூண்டு சேர்த்து குழம்பு செய்யுங்கள்.

இப்படி செய்யும் குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடும் போது சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த கறிவேப்பிலை பூண்டு குழம்பு சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. அதுவும் ஒருமுறை இந்த குழம்பை செய்தால், ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

Karuveppilai Poondu Kuzhambu How To Make a Curry Leaves Garlic Kuzhambu

உங்களுக்கு கறிவேப்பிலை பூண்டு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை பூண்டு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* பூண்டு - 2 கையளவு
* கட்டிப் பெருங்காயம் - 4 துண்டு
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி + 1 கைப்பிடி (நறுக்கியது)
* இஞ்சி - 3 சிறிய துண்டு
* தக்காளி - 1 1/2 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 ஸ்பூன் மிளகு, 1 கைப்பிடி சின்ன வெங்காயம், 3 துண்டு இஞ்சி, 1 கையளவு நாட்டு பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கைப்பிடி நாட்டுப்பூண்டு , 4 பெருங்காயக் கட்டியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை 1 கைப்பிடி சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 1/2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மூடி வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கறிவேப்பிலை பூண்டு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 20, 2026, 13:17 [IST]
Desktop Bottom Promotion