தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா?

Mango City of Tamil Nadu: தமிழ்நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம் தான் சேலம். இந்த சேலம் நகரமானது 1772-ல் உருவாக்கப்பட்டது. சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள் உள்ளிட்ட பல வம்சங்களால் ஆளப்பட்டது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள சேலம் தொழில்துறை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது.

இந்த சேலம் நகரத்தை 'எஃகு நகரம்' என்றும் அழைப்பர். ஏனெனில் பார்கள், கம்பிகள் போன்ற அனைத்து வகையான எஃகு பொருட்களையும் தயாரிக்கும் பல எஃகு ஆலைகள் இங்கு அமைந்துள்ளன. இது தவிர இந்த சேலத்தை 'மாம்பழ நகரம்' என்றும் அழைப்பர். கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த சேலத்தின் பெயரை சொன்னதுமே நம் அனைவரது நினைவிற்கும் முதலில் வருவது மாம்பழம் தான்.

Why Salem Is Called the Mango City of Tamil Nadu

ஏனெனில் சேலத்தில் பலவிதமான ருசியான மாம்பழங்கள் விளைகின்றன. முக்கியமாக சேலத்தின் மல்கோவா மாம்பழம் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு அதன் தனித்துவமான மணமும், தித்திக்கும் சுவையும் தான் காரணம். இந்த சேலத்தின் மாம்பழத்தை போற்றும் வகையில் சிறு வயதில் "மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம், சேலத்து மாம்பழம்... " என்று ஒரு பாட்டை கேட்டிருப்போம்.

சேலம் ஏன் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படுகிறது?

சேலத்தில் அனைத்து வகையான மாம்பழங்களையும் பயிரிடத் தேவையான சரியான தட்பவெப்ப நிலை மற்றும் மண் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த பகுதியில் பயிரிடப்படும் மாம்பழங்கள் சுவையாக இருக்க, அந்த மண்ணில் கால்சியம் அதிகம் இருப்பது தான் காரணம்.

மல்கோவா, அல்போன்சா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை ஆகிய மாம்பழ ரகங்கள் வரகம்பாடி, வாழையடி தோப்பு, வீரக்கல், சோரகை, மேட்டூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சங்ககிரி உள்ளிட்ட சேலத்தைச் சுற்றியுள்ள இடங்களில் அதிகம் விளைகின்றன.

Why Salem Is Called the Mango City of Tamil Nadu

சேலம் மல்கோவா மாம்பழத்தின் தனித்துவமான பண்புகள்

சேலம் மல்கோவா மாம்பழம் மற்ற வகை மாம்பழங்களில் இருந்து தனித்துவமான சுவையுடன் இருக்கும். முக்கியமாக இந்த வகை மாம்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். இந்த மாம்பழத்தின் நறுமணம் தனித்துவமானது. இதன் மணத்தை சுவாசிக்கும் போது, அதன் சுவையை உணர முடியும். அந்த அளவில் நல்ல மணத்தையும், சுவையையும் மல்கோவா மாம்பழம் கொண்டிருக்கும். இந்த வகை மாம்பழம் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் கலந்து அழகிய நிறத்தில் இருக்கும்.

சேலத்தின் பிற சிறப்பம்சங்கள்

* சேலத்தில் பேசப்படும் தமிழானது கொங்கு தமிழைப் போன்று இருக்கும். அதாவது, இப்பகுதி மக்கள் தமிழை சற்று இழுத்து பேசுவார்கள்.
* சேலத்தில் மல்கோவா மாம்பழம் தவிர, சேலம் தட்டு வடை செட், பருப்பு பொடி சாதம் போன்றவையும் பிரபலமான உணவுப் பொருட்களாகும்.
* 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் ஏற்காட்டின் நுழைவாயிலே சேலம் தான்.
* சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோயில், சுகவனேஸ்வரர் கோயில் மற்றும் 1008 சிவலிங்க கோயிலும் பிரபலமானது.
* தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான நீர் ஆதாரமான மேட்டூர் அணை சேலத்தில் தான் உள்ளது.
* முக்கியமாக செர்வராயன் மலை, கஞ்ச மலை என 4 புறமும் மலைகளால் சூழப்பட்ட அழகிய நகரம் தான் சேலம்.
* ஆண்டு முழுவதும் இங்கு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாம்பழம் ஆகியவற்றைத் தவிர காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன.

Story first published: Monday, March 16, 2026, 23:31 [IST]
Desktop Bottom Promotion