For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரமண மகரிஷி சொன்ன வாழ்க்கைக்கு அவசியமான உபதேசங்கள்!!

ரமண மகரிஷி சொன்ன வாழ்கைக்கு தேவையான உபதேசங்கள் இந்த ஆன்மீக கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Gnaana
|

அடியார்களால், மகான் இரமணர், ரமண மகரிஷி மற்றும் பகவான் ரமணர் என அழைக்கப்படும் கருணைக்கடல், அருள் வள்ளல், மகான் இரமணர் அவர்களின் அருள் நிலை, மாபெரும் ஞானக்கடல் ஆகும்.

இளைய வயதில், பெரிய புராணம் உள்ளிட்ட இறை நெறி நூல்களை வாசித்து, மதுரை மீனாட்சி அன்னையை தினமும் தரிசிக்கும் பாக்கியம் பெற்று, இறைவனிடத்தும் அடியாரிடத்தும் மாறாத பற்று கொண்டு, அதுவே பின்னர் திருவண்ணாமலையில் இருக்கும் உறவினர் மூலமாக அருணாச்சல நாயகன் அடி தொழ பேரவாக் கொண்டு, இடையில் நிகழ்ந்த உறவின் மரணத்தில் "நான் யார்?" இங்கே உடல் தான் இறந்திருக்கிறது, உயிர் எங்கே? எனும் ஆத்மா விசாரத்தில் திளைத்து, உடனே, சுற்றத்தை விடுத்து கிளம்பினார்.

Quotes of Ramana Maharish to lead a peaceful life

இனி உள்ள மானிடப் பிறவி காலமெல்லாம், அந்த அருணனின் பாதக் கமலத்தில் தான் என்ற சிந்தைப் பெருக்கின் உறுதியோடு திரு அண்ணாமலை வந்தடைந்தார்.

பல்லாண்டு காலம், திருவண்ணாமலை திருக் கோவிலில், பாதாள லிங்க அறையில், விருப்பாட்சி குகையில், கந்தாஷ்ரமத்தில் என்று நீண்டு கொண்டே போன, அவரின் ஆத்மத் தேடுதலின், மோன நிலை தியானத்தின் நிறைவாக, அக்காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஞானியரான, மகான் சேஷாத்ரி சுவாமிகளின் திருக்கண்களில் காணப் பெற்று, மோன நிலையில் திளைத்திருந்த மகான் இரமணர் உடல் எல்லாம் எறும்புகள் எல்லாம் மொய்க்கும் நிலையை எல்லாம் மறந்து, தன உணர்வு இல்லாமல், கிடந்த நிலையில், மகான் இரமணரின் தியானம் நிறைவானது கண்டு, மனம் மகிழ்ந்து, அவரை அங்கிருந்து வெளியில் கொண்டு வரக் காரணம் ஆனவர்.

பெருமை மகான் சேஷாத்திரி ஸ்வாமிகள், அதன் பின்னும் மகான் இரமணருடன் இறை உறவில் இருந்தவர், பின்னர் மகான் இரமணர் மலையடிவாரத்தில், தற்போது "இரமணாஷ்ரமம்" இருக்கும் இடத்தில், நிறைவானார்.

மகான் இரமணரின் தத்துவம் :

மகான் இரமணர் மேற்கொண்ட இறை நெறி "அத்வைதம்" எனப்படும். அத்வைதம் என்பது, இரண்டும் ஒன்றுதான், வேறல்ல எனப் பொருள் படும். நான் எனும் தன் முனைப்பும், அந்த நிலையில் வணங்கும் இறையும் ஒன்றே, அல்லாமல் வேறு வேறல்ல, என்பதே.

இந்த நெறியின் உயரிய கருத்து. முன்னம் உலகோருக்குப் போதித்த பகவான் ஆதிசங்கரர், மேற்கொண்ட தத்துவமும், "அத்வைத" சிந்தனையே!

இந்த செயல்கள் செய்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி நுழையும் என தெரியுமா?

இந்த அத்வைத வழியில் போதனைகள் செய்து அடியாருக்கெல்லாம், அருந்தவச் செல்வமாகத் திகழ்த்தவர்தான் மகான் இரமணர்.

அண்ணலின் அருள் நாளுக்கு நாள் பரவி, பல மொழிகளிலும் வெளியான மகான் இரமணர் அருள் நெறி பற்றிய கட்டுரைகளால், அவற்றைப் படித்து அவரது அருந்தவ நிழலில் இளைப்பாற, அவரது தத்துவங்களை நேரில் கேட்கும் பெரும் பாக்கியம் பெற எண்ணி, பல்வேறு அயல் தேசத்தவர் எல்லாம் அண்ணல் தவக் கோலத்தில் வீற்றிருந்த, திரு அண்ணாமலைக்கு மனதில் உணர்ச்சிப் பெருக்கோடு வந்தனர், வார்த்தைகளில் வெளிப்படா உணர்வில், மெய்யுருகிக் கரைந்தனர்.

தினமும் அடியார் எல்லாருக்கும் பார்வையால், அவர்கள் மானிட பிறப்பின் பாவங்கள் போக்கி, அருள் ஆசி செய்தார் நல்லார், மகான் இரமணர்.

நான் யார் தெரியுமா? என் பவர், என்ன தெரியுமா? என சாமானியர் முதல் அனைவரும் தன் முனைப்பு காட்டும் இக் காலத்தில், நான் யார் என்றக் கேள்வியை தன்னிடத்தில் கேட்டு, அதற்கான பதிலைத் தேடுவதே, வாழ்வின் அர்த்தம் என உரைத்தவர் மகான் இரமணர்,.

நான் யார்?

இந்தக் கேள்வி தான், "திருச்சுழி.வேங்கட ரமணன்" எனும் பூர்வாசிரப் பெயரிலிருந்து "பிராமணச் சாமி" எனும் தவம் இருந்த காலத்தில் பெற்ற நிலையிலிருந்து, அவரை "மகான் இரமணர்" என்ற இறை நிலைக்குக் கொண்டு சேர்த்தது.

நான் யார் என்ற கேள்வியை, தனக்குத் தானே கேட்டுக் கொண்டு, அகந்தையாகிய நான் எனும் எண்ணம், எங்கிருந்து வருகிறது, அதன் மூலத்தை அறிய முயன்று, உடல் நான் இல்லை என்றால், உடல் அழிந்த பின் உயிர், எங்கே செல்கிறது, அதிலேயே அந்தத் தேடல் நிலையில் மனத்தை இருத்தினால் பிரம்மத்தில் ஒடுங்கும் நிலையை அறியலாம். இறையும் உயிரும் ஒன்றே, என அறிய மூச்சை சீராக்கி, மனத்தை அடக்கி, சிந்தையை ஒடுக்கி இருந்து வர, கை கூடும் அந்த பிரம்ம நிலை எல்லாம் என்பதே, மகான் இரமணர் அருள் உபதேசம்.

போதனைகள் :

எளிமையாக மகான் இரமணர் போதனைகளை அறிய, குருவருள் துணை இருக்கப் பிரார்த்திப்போம்.
நம்மையே நாம் கேட்டு, அதன் மூலம் மட்டுமே, மனதைப் பண்படுத்தி, நான் என்பதன் கரு எங்கே உருவாகிறது என்பதை, அறிய முடியும்.
தம் உடல் சார்ந்த நிலைகளான உறக்கம், கனவு, நனவு போன்ற இவற்றை எல்லாம் கடந்த, தன்னிலையற்ற உள்மன விசாரணையால் கிடைப்பதே, நான் எனும் ஆன்ம சொரூபம்.

மனிதன், உடல், மூச்சு மற்றும் ஐம்புலன்கள், மனம், புத்தி, பித்து நிலை கடந்த நிலையில் லயித்து, இறுதியில், "நான்" என்பது சச்சிதானந்த சொரூபமே, என உணரலாம்.

மகான் இரமணர் உபதேசங்கள்

  • மனம் அமைதி அடைய, மூச்சை சீராக்குவதே, ஒரே வழி.
  • மௌனமாக இருப்பது விரதம், ஆயினும் வாயை மூடிக் கொண்டு, மனதைத் திரிய விட்டால், அந்த மௌனத்தால் யாதொரு பயனும் விளைவதில்லை.
  • அலை பாயும் மனத்தால், எண்ணத்தின் சக்தி வீணாகிறது, ஒரே எண்ணத்தில் மனதை இருத்தும்போது சக்தி சேமிக்கப்பட்டு, மனம் வலுவடைகிறது.
  • நான் யார் என்பது மந்திரம் இல்லை, அது நம்மில் எங்கு உதிக்கிறது என்பதைக் குறிக்கிறது, எல்லா எண்ணங்களுக்கும் மூலம் அதுவே.
  • மனிதன் தானே அனைத்தையும் செய்வதாக எண்ணுகிறான், நாம் ஒரு கருவியே, நம்மை மீறிய சக்தியே நம்மை இயக்குகிறது எனத் தெளிந்தால், பல் துன்பங்களிலிருந்து விடு படலாம்.
  • தன்னை உணர்ந்தவனால் மட்டுமே, உலகத்தை உணர முடியும்.
  • தான் யார் என்பதை நன்கு புரிந்த பின்னரே, இறை ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும். ஆத்ம விசாரம், தன்னில் தேடலே, தவம்,யோகம் மந்திரம் எல்லாம். ஒருவன் தான் யார் என அறிந்து கொள்ள, ஆத்ம விசாரம் மிக முக்கியம்.
  • மனதின் கரு எல்லாம் எங்கே உதிக்கிறதோ, அதுவே ஹிருதயம்!- மையம் எனப் பொருள் படும், அது உடலின் உறுப்பல்ல, நமது எண்ணங்களின் மையம்.

மனிதர்களுக்கு பல நற்கருத்துக்கள், அரிய வாழ்வியல் தத்துவ உண்மைகள் எல்லாம் கிடைக்க, அவர்கள் அருள் அமுத நிலையை அடைந்து, நற்கதியை அடையவே. இறைவன் அவ்வப்போது இறையாளர்களை, இந்த பூமிக்கு அனுப்பி வருகிறான், அப்படி இறைவன் நமக்கெல்லாம் அளித்த கருணைக் கொடைதான், மகான் இரமணர்.

English summary

Quotes of Ramana Maharish to lead a peaceful life

Quotes of Ramana Maharish to lead a peaceful life
Story first published: Saturday, July 15, 2017, 15:00 [IST]
Desktop Bottom Promotion