For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் சுமாரான தோற்றத்தை சூப்பராக மாற்றுவது எப்படி?

By Hemi Krish
|

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை-ன்னு சும்மா எல்லாம் பாரதியார் சொல்லைங்க. உங்களின் தோற்றமே நீங்கள் யார் என்று கூற வேண்டும். ஒரு பக்கம் சாய்ந்தபடி அல்லது முன்னாடி கூன் போட்டபடி எதையாவது நாம சொன்னா நல்லாவா இருக்கும்.

உங்களின் எலும்புகள் நீங்கள் எப்படி அமர்கிறீர்களோ, எப்படி நடக்கறீர்களோ அவ்வகையில் வளைந்து விடும். பின்னர் நீங்களே நினைத்தாலும் மாற்ற முடியாது. ஆகையால் அரம்பதிலேயே திருத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் தோற்றத்தை மாற்ற இதோ இங்கே சில வழிகள்...

முதலில் நீங்களே உங்களை கண்ணாடியில் பாருங்கள். தலை சாய்க்காமல் நேராக நிற்கவும். இரு தோள்பட்டைகள், கைகள், முட்டி, கால்கள் எல்லாம் சமமாக வைத்துக் கொள்ளுங்கள். பாதங்களை கோணலாக வைக்காமல் இரு கணுக்கால்களையும் இணையும்படி வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை நிற்கும் போதெல்லாம் இந்த நிலையையே பின்பற்றுங்கள். எலும்புகள் வளையாமல் இருக்க பாதுகாக்கும்.

Tips To Get A Good Posture

நேர் நடை:

சிலர் நடக்கும் போது லேசாக கூன் போட்டு நடப்பார்கள், உயரமானவர்கள் லேசாக சாய்ந்தபடி நடப்பார்கள். சிலர் முகத்தை முன்கொண்டு வந்து நடப்பார்கள். இதெல்லாம் கழுத்து, இடுப்பு மற்றும் முதுகெலும்பினை பாதிக்கும். சிங்கம் சூர்யாவைப் போல் விறைப்பாகவும் நடக்க வேண்டாம், இப்படி தொங்கிப் போயும் நடக்க வேண்டாம். முறையான நடைப் பயிற்சியை தொடங்கினால் மிடுக்காக நீங்கள் நடக்கலாம். தலையில் சிறிது கனமான பொருளை வைத்து மணலில் நடந்து பார்க்கலாம்.

அல்லது தலையில் ஒரு கம்பியால் கட்டி மேலிருந்து உங்களை இழுப்பது போல் நினைத்துக் கொண்டு நடந்தால் நிமிர்ந்த நடை வரும். இன்னும் சுலபமான வழி என்னவென்றால், ஒரு சுவற்றில் ஒட்டியபடி சாய்ந்து நிற்கவும். தலையும் சுவற்றில் சாய்ந்திருக்க வேண்டும். முதுகில் சிறிது இடைவெளி தெரிய வேண்டும். இவ்வாறு ஒரு 10 நிமிடங்கள் நின்றால், அதே நிலையில் நடை வரும். நடக்கும் போது ஒரு நல்லத் தோற்றத்தை தரும்.

நேராக படுத்துக் கொள்ளுங்கள்:

ஒரே நிலையில் நம்மால் தூங்க இயலாது. அவ்வாறு படுத்தாலும் நல்லதில்லை. அவ்வப்போது படுக்கும் நிலையை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருக்களித்து வெகு நேரமோ அல்லது குப்புறப் படுத்துக் கொள்வதோ கூடாது. முடிந்த வரை தலைக்கு சரியான தலையணையை கொடுத்து நேராக படுத்தால் தண்டுவடத்திற்கு நன்மை தரும்.

படுக்கும் மெத்தை கடினமானதாக இருந்தால் உடல் வலியைத் தரும். முதுகிற்கு ஏதுவான, மிருதுவான மெத்தையில் உறங்குங்கள். முதுகுத் தண்டுவடத்தை பாதுகாக்க முட்டிக்கு அடியில் தலையணை வைத்தாலும் நல்லது. அதேபோல் சரியான நிலையில் தூங்கவில்லையென்றால் அது முதுகுவலிப் பிரச்சனையைக் கொடுக்கும்.

வெகு நேரம் உட்கார்ந்தபடியே இருக்காதீர்கள்:

இப்போதெல்லாம் கணிணியில்தான் பெரும்பாலோனர் வேலை செய்கின்றனர். வேலை மும்முரத்தில் சீட்டின் நுனியில் முன்னாடி வந்தபடி வேலை பார்ப்பார்கள். அது தீராத வலி கழுத்தும் முதுகிற்கும் கொடுக்கும். எப்போதும் நாற்காலியில் சாய்ந்தப்டிதான் வேலை பார்க்க வேண்டும். வெகு நேரம் ஒரே இடத்திலேயே அமரக் கூடாது. அவ்வப்போது எழுந்து நடந்துவிட்டு வர வேண்டும்.

ஹை ஹீல்ஸ்க்கு தடா:

ஹை ஹீல்ஸ் போடும் மாடல்களை டீ வி யில் பார்த்து, நீங்களும் இந்த மேடு பள்ளம் இருக்கும் ரோட்டில் போட ஆரம்பித்தால், இடுப்பு, முதுகு முழங்கால், மூட்டு கணுக்கால் பாதம் இப்படி எல்லா பாகங்களிலும் பிரச்சனைகளை கொண்டு வரபோகிறீர்கள் என்று அர்த்தம்.

2009 ல் American Podiatric Medical Association நடத்திய ஆய்விலும் சரி, 2013 ம் ஆண்டில் Brazilian journal இதழ் வெளியிட்டுள்ள ஆய்விலும் சரி, இரண்டிலுமே ஹை ஹீல்ஸ் போடுவதினால் ஏற்படும் தீமைகளையே சுட்டிக் காட்டியிருக்கின்றன. முதுகு, முழங்கால்,பாதம் ஆகியவற்றில் வரும் பாதிப்புகள் மட்டுமல்லாமல், பதின்ம வயதிலேயே ஹீல்ஸ் அணிவதால் தோற்றப் பொலிவையே மாற்றும் என கூறுகின்றனர். ஆகையால் ஹீல்ஸ் அணிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்பவும் ஆசை யாரை விட்டது என போட நினைத்தால் ஹீல்ஸ் , 2 இன்ச் க்கு மேல் போக வேண்டாம்.

யோகா பயிற்சி :

யோகா உங்கள் எலும்பு, முதுகிற்கு பலம் கொடுத்து,நல்ல தோற்றத்தை தருகிறது. தடாசனம் உங்களின் முதுகுத் தண்டுவடத்திற்கும் இடுப்பெலும்பிற்கும் ஏற்ற யோகாசனம்.

தடாசனம் செய்வது எப்படி?

  • முதலில் நேராக நிற்க வேண்டும்,இருகால்களுக்கும் அரை அடி இடைவெளி தர வேண்டும்
  • உங்கள் உடலின் பாரத்தை கால்கள் தாங்குவதைப் போல் நிற்க வேண்டும்.
  • இப்போது மெதுவாக உங்கள் குதி கால்களை உயர்த்த வேண்டும்.
  • கைகளை மேல் நோக்கி உயர்த்தி உள்ளங்கைகளை கோர்த்து நமஸ்காரம் செய்வது போல் செய்ய வேண்டும்.
  • உங்கள் எடையை கால் விரல்கள் தாங்குவதைப் போல் இருக்க வேண்டும்.
  • 10 எண்ணும்வரை அப்படியே இருக்க வேண்டும்.
  • கை முட்டிகளை வளைக்கக் கூடாது.நேராக வைக்க வேண்டும்.
  • பின் கைகளை மெதுவாக பிரித்து பின்பக்கம் கொண்டு வர வேண்டும்.
  • குதிகால்களை தரையில் மெதுவாக வைத்து, தலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்த வேண்டும்.
  • இவ்வாறு ஐந்து நிமிடங்கள் இருந்த பின் மீண்டும் செய்ய வேண்டும்
  • இது போல் மூன்று முறை செய்யவும்.
  • இந்த யோகாசனத்தை சரியான முறையில் செய்தால் அதன் பயனை முழுவதும் பெறலாம்.

அதிக நேரம் கணிணி, மொபைலில் இருப்பதை தவிருங்கள்:

எப்பொழுதும் கணிணி மற்றும் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தால், உடல் பின்பக்கம் சாய்ந்தபடியே இருக்கும் தோற்றத்தினை பெறுவார்கள். அவற்றை பார்க்கும் மும்முரத்தில் பின்பக்கம் உடல் வளைந்து சாய்ந்து கொண்டு போவதை கவனித்திருக்க மாட்டார்கள். அது அவர்கள் நடையிலும் வந்து பின்னர் எப்போதும் பின்னாடி சாய்ந்தபடியே இருப்பார்கள். இதனால், இடுப்பு பற்றும் முதுகு உடல் பாரத்தினை தாங்கி பலவீனமாகிவிடும். ஆகவே கூடுமானவரையில் அதிக நேரம் மொபைல் மற்றும் கணிணியில் இருப்பதை தவிருங்கள்.

பலமான முதுகைப் பெற உடற்பயிற்சி:

உங்கள் தோற்றத்தைக் கூட்ட இன்னொரு நல்ல வழி உடற்பயிற்சியாகும். உங்கள் இடுப்பு, அடிவயிறு, முதுகு ஆகியவற்றை பலமாக்கி தசைகளை உறுதிசெய்யும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அழகான தோற்றத்தை நீங்கள் பெறலாம்.

இதோ ஒரு எளிய பயிற்சி:-

  • நேராக முதுகு தரையில் படும்படி படுத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு முழங்கால்களை வளைத்து, பாதங்களை தரையில் நன்றாக பதியும்படி வைக்க வேண்டும்.
  • கைகளை நன்றாக தளர்த்து, உள்ளங்கைகள் தரையில் பதியும்படி வையுங்கள்.
  • பிறகு ஆழ்ந்து மூச்சு இழுத்து விட வேண்டும்.
  • சில நொடிகளுக்கு பிறகு எழுந்துகொள்ளலாம்.

கால் மேல் கால் போட்டு அமர்வது நல்லதா?

கால் மேல் கால் போட்டு அமர்வதால் உடல் பாரம் ஒரு பக்கமே சாய்ந்து இடுப்பு மற்றும் அடி முதுகு வலி ஏற்படும். அதுமட்டுமல்லாது நரம்புகளையும் அது பாதிக்கும். ஆகவே நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்வதை நிறுத்துங்கள். நாற்காலியில் அமரும்போது எப்போதும் பாதங்கள் தரையில் தொடும்படி அமர்ந்தால் உடல் பாரம் எங்கேயும் தாங்காமல் சீராக இருக்கும். இதனால் முதுகெலும்பு பாதுகாப்பாக இருக்கும்.

நீச்சல் பயிற்சி:

நீச்சல் அடிப்பது முதுகிற்கென்று அல்லாமல் உடல் முழுவதற்கும் மிக நல்லது. தசைகள் இறுகும். முதுகிற்கு பலம் அளித்து அங்கு இணையும் எல்லா எலும்பு இணைப்புகளுக்கும் சிறந்த உடற்பயிற்சியை தருகிறது. முக்கியமாக கணிணியிலேயே நாள் முழுவதும் இருப்பவர்களுக்கு பேக்ஸ்ட்ரோக் எனப்படும் மல்லாந்து அடிக்கும் நீச்சல் மிகவும் பயனளிக்கக் கூடியது. இது மார்புக் கூட்டினை விரிவடையச் செய்து,தோள்பட்டைகளை பலம் பெறச் செய்கிறது.

சரியான தலையணையை உபயோகிங்கள்:

சிலருக்கு தலையணை சரியாக இல்லையென்றாலும் தலைவலி,கழுத்து வலி ஆகியவை வரும். சரியான தலையணை என்றால் அது முதுகிற்கு அழுத்தம் தரக்கூடாத வகையில் இருக்க வேண்டும். இப்போழுதெல்லாம் கடைகளில் நம் முதுகிற்கு பாதகம் ஏற்படாத வகையில் ஸ்பெஷலாக தலையணையை வடிவமைத்து தருகிறார்கள். அதனை கேட்டு வாங்கி உபயோகித்தால் முதுகிற்கு கேடு இல்லாத வகையில் நல்ல தோற்ற்ததிற்கு வழி வகுக்கும்.

மேற்கூறிய அனைத்தும் உங்கள் தோற்றத்தை இன்னும் அழகாய் காண்பிக்கும் வகையில் உதவி செய்கிறது.இவற்றை பின்பற்றி, உங்கள் மனதையும் திடமாய் வைத்திருந்தால், நாளைய உலகம் உங்களுடையதாகும்.

English summary

Tips To Get A Good Posture

Your posture helps you out for not only beauty , also for your healthy body,
Desktop Bottom Promotion