For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நாட்டுச்செக்கு எண்ணைகளின் மகத்துவங்கள் பற்றிய குறிப்பு!!

  By Gnaana
  |

  புதிய கண்டுபிடிப்புகள் வரும் சமயங்களில், நாம் இயற்கையாக பயன்படுத்தி வந்ததையெல்லாம், சுத்த பட்டிக்காட்டுத்தனம் என்று ஒதுக்கி, புதியவரவுகளை தலையில்வைத்து கொண்டாடி, அவற்றால் இன்று உடல்நலம் கெட்டு, அதனால் வந்த புத்திமாற்றத்தால், மீண்டும் முன்னோர் வகுத்த பழைய வாழ்வியல்நெறிகளை தேடிப்பிடித்து, பயன்படுத்திவருகிறோம்.

  சென்ற அரை நூற்றாண்டுகளில் ஏற்பட்ட நவீன மாற்றங்களால், நாம் இழந்தவைகளில் முக்கியமான ஒன்று, இயற்கை எண்ணைவகைகள். கிராமங்களில் தேங்காயை, நிலக்கடலையை, எள்ளைக் காயவைத்து, மரச்செக்குகளில் ஆட்டி, எண்ணையாக்கி, அவற்றை அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தி, உடல்நலமுடன் வாழ்ந்தவர்கள் நம் பெரியவர்கள்..

  Benefits of Cold Process Oil

  மாடுகள் மூலமும், கைகளாலும் இயக்கப்பட்ட மரச்செக்குகள் பின்னர், விஞ்ஞானவளர்ச்சிகளால், மின்சாரம்மூலம் இயங்கும்படி அமைந்தாலும், நாம் அதை மரச்செக்கு ஆட்டுபவர்களின் சிரமத்தைக்குறைக்க வந்ததாக எண்ணிக்கொண்டோம். வீடுகளில் அப்போது மாவரைக்கும் கிரைண்டர்கள், மெல்ல எட்டிப்பார்த்த சமயமது.

  ஆனால், அத்தகைய விஞ்ஞான வளர்ச்சிகள், செக்கு ஆட்டுபவர்களுக்கும், நமக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தையும், நம் நல்ல உடல்நிலையையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்போகும் ஒரு மோசமான நிகழ்வின் முன்னோட்டம், என்று உணரவில்லை.

  எண்ணை வித்துக்களை மரச்செக்கில் கடைவதுபோய், மில்களில், இயந்திரங்கள் மூலம் பிழியப்பட்டன. இயந்திரங்களின் சூடும், செயற்கை வாசமும், எண்ணைகளை இயற்கைமணம் வீசும் மரச்செக்கு எண்ணைகளிலிருந்து அதிகம் மாறுபட்டு காண்பித்தாலும், நாட்டுச்செக்கு எண்ணையில் கலப்பட வாய்ப்பு இருந்த காரணத்தால், மக்கள் பாலித்தீன் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு, வெளிர் நிறத்தில் காணப்பட்ட எண்ணைகளை, பரவலாக வெளிவந்த விளம்பரங்களின் மூலமாக, நூறு சதம் சுத்தமானது, கொழுப்பு நீக்கப்பட்டது, இதயத்துக்கும், உடலுக்கும் நன்மையானது என்ற கவர்ச்சிகர வாசகங்களில் நம்பி, மரச்செக்கு எண்ணையைவிட சற்றே விலையும் குறைவாக இருந்ததால், அவற்றை உபயோகிக்க ஆரம்பித்தனர்.

  Benefits of Cold Process Oil

  தேவைகள் அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து, பாமாயில் எனும் பனை எண்ணை இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பின்தான், ஆலை வியாபாரிகள் எண்ணை வியாபாரத்தை, நாட்டு செக்கு வியாபாரிகளிடம் இருந்து முழுமையாகப்பறித்தனர். தொடர்ச்சியான ஆலைஎண்ணைகளின் விளம்பரங்கள் மூலம், மெல்லமெல்ல, நுகர்வோரின் ஆதரவு குறைந்து, நாட்டு எண்ணைகள் உற்பத்தி குறைந்துபோனது.

  இந்த காலகட்டத்தில், மருத்துவ வியாபாரிகள் எல்லாம் ஒன்றுகூடி, இந்தியாவில் இதயம்சம்பந்தமான பாதிப்புகள் அதிகரிக்க, நாம் உபயோகிக்கும் நாட்டுச்செக்கு நல்லெண்ணையும், கடலை எண்ணையுமே காரணம் என்று கூறி, அவற்றை உணவில் தவிர்த்து, கொழுப்பு நீக்கப்பட்ட ரீபைண்ட் எண்ணைகளை உபயோகிக்கவேண்டும், என்ற ஒருஅரைவேக்காட்டுத்தனமான அறிக்கையின்மூலம் திரும்பத் திரும்ப பிரசாரம் செய்து, மக்களை பயமுறுத்த, ஒரேயடியாக நாட்டுமரச்செக்குகளின் எண்ணை உற்பத்தி, நின்று போனது.

  அதன்பின், சன்பிளவர் எண்ணைகள் உடலுக்கு நலம்பயப்பது, அதில் கொழுப்பு இல்லை, நன்கு சுத்திகரிக்கப்பட்டது, என்ற பிரச்சாரத்தில் இன்றுவரை, அந்த ரீபைண்ட் எண்ணைகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

  ரீபைண்ட் யுகத்தில் மனிதர்களுக்கு அதிக உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்திய "தாவர நெய்" எனப்படும் டால்டாவும், உபயோகத்தில் இருந்து மறைந்தது, ஒருஆறுதல்தான். அக்காலங்களில், இனிப்பு, பலகாரங்கள் செய்ய, மணத்திற்காகவும், கூடுதல் செலவுபிடிக்கும் பசு நெய்க்கு மாற்றாகவும், வனஸ்பதி எனும், உடலுக்கு அதிகஅளவில் தீமைகள் செய்யும் டால்டாவைப்பயன்படுத்திவந்தனர்.

  ஒரு லிட்டர் எண்ணை தயாரிக்க, இரண்டு கிலோவுக்கும் மேல் தானியங்கள் தேவைப்படும் நிலையில், இன்று திரும்பிய பக்கமெல்லாம், சூரியகாந்தி எண்ணைகள் கடைகளில் அதிகஅளவில் குவிந்திருப்பது எப்படி? யோசித்திருக்கிறோமா?

  இயற்கைஎண்ணைகளைவிட, மிகக்குறைந்தவிலைகளில் அவை எப்படி கிடைக்கிறது?

  சூரியகாந்திஎண்ணை ஒருலிட்டர் தயாரிக்க, குறைந்தபட்சம் மூன்றுகிலோ விதைகள் அல்லது ஐயாயிரம் மலர்கள் தேவைப்படும், எப்படி அதிகஅளவில் தயாரிக்கிறார்கள்?

  நம்மிடம் அந்தஅளவு மலர்கள் உள்ளனவா? இதேபோலத்தான் தேங்காயெண்ணை தயாரிப்பும், எப்படி அதிகஅளவில் உற்பத்தி சாத்தியம்? பெட்ரோலிய கழிவிலிருந்து சுத்தம்செய்து எடுக்கப்பட்டு, மினரல் ஆயில் என்ற பெயரில் நம்நாட்டில் அதிகஅளவில் இறக்குமதியாகும் ஒரு பொருள், அனைத்துவகை எண்ணைகளிலும் கலக்கப்படுவதாக நாம் படிக்கிறோமே, அதன் பொருள் என்ன?

  Benefits of Cold Process Oil

  இதைவிடக்கொடுமை, தேங்காயெண்ணை எடுக்கப்பயன்படும் கொப்பரைகள் நாள்பட்டால் பூஞ்சைபிடிக்கும் என்ற காரணத்தால், அவற்றின்மேல், கந்தகத்தூள்களை தடவி காயவைத்து எண்ணை எடுக்கிறார்களே, அந்த எண்ணையைத் தலையில் தடவிவந்தால், அதன்மூலம் தலைமுடி உதிராமல், பின் என்னவாகும்?

  இருக்கட்டும், "விழித்துக்கொண்டோரெல்லாம், பிழைத்துக்கொண்டார்" எனும் வைர வரிகளுக்கேற்ப, நாம் இப்போதாவது விழித்துக்கொள்வோம், பாரம்பரிய நாட்டு செக்கு எண்ணைகள் சற்றே விலைகூடுதலானாலும், அவற்றையே பயன்படுத்தி, உடல்நலம் பெறுவோம்.

  நாட்டு செக்கு எண்ணை பயன்கள்

  தாவர எண்ணைகள் உடலுக்கு நன்மைகள் தரும் கொழுப்பு நிறைந்தவை, உடலுக்கு தீங்கிளைக்கும் கொழுப்புகள் எல்லாம், அசைவ உணவுவகைகளாலே ஏற்படுகிறது. அதனால்தான் இப்போது சில மருத்துவர்கள், செயற்கை எண்ணைகளின் மோசமான விளைவுகளைப்பார்த்துவிட்டு, மீண்டும் மரச்செக்குஎண்ணைகளைப் பரிந்துரைக்கின்றனர்.

  வீடுகளில், மரச்செக்கில் ஆட்டிய எண்ணைகளை, ஃபில்டர் செய்யாமல், வெயிலில் நன்கு காயவைத்து பயன்படுத்தினர். இயற்கையான செக்குஎண்ணை மிக அடர்த்தியாக, கருநிறத்தில், வாசனையாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும். இந்த எண்ணைகளில், நலம்பயக்கும் வைட்டமின்கள், புரோடீன்கள்,அரிய வகை தாதுக்கள் மற்றும் உயிர், நார்ச்சத்துகள் எல்லாம் நிறைந்திருக்கும்.

  Benefits of Cold Process Oil

  மரசெக்கு எண்ணை பயன்கள்

  சமையலில் வறுக்கவும், பொரிக்கவும் அன்றாடம் பயனாகும் கடலை எண்ணை, உடலில் சேர்ந்த கொழுப்புகளை கரைக்கும் தன்மைகள் மிக்கது.

  இதயத்துக்கு கெடுதல்,சமையலில் பயன்படுத்தக்கூடாது என்று மேலை மருத்துவம் பயமுறுத்தி நம்சமையலில் ஒதுக்கிவைத்த தேங்காயெண்ணை இல்லாமல், கேரளத்தில் ஒருஉணவும் சமைப்பதில்லை. அப்படியானால் அவர்களுக்கு அதிகஅளவில் அல்லவா, இதய வியாதிகள் வந்திருக்க வேண்டும்?

  ஆயினும், இதயவியாதிகள் சதவீதம் கேரளத்தில் வெகுகுறைவு என்பதுதானே, நிதர்சனம்! தாய்ப்பாலுக்கு, இணையாகக்கருதும் உயிராற்றல்மிக்க தேங்காய் எண்ணையே, உடலின் நோய்எதிர்ப்புசக்தியை அதிகரித்து, அவர்களின் உடல்நலம் காத்துவருகிறது என்பதுதான், உண்மை.

  ஆமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணை, சிறந்த மலமிளக்கி, உடல்வலி நிவாரணி, உடலை சுத்திகரிக்கும் தன்மைமிக்கது.

  சில காலம் முன்பு, வெறும் விளக்கெண்ணையை மட்டுமே, உடல் வலி நிவாரணியாக சகல உடற்பிணி நீக்கும் அற்புத மருந்தாக, ஊடகங்களில் விளம்பரங்கள் செய்து, வணிக உலகையே,. புதிய வணிகஉத்தியால் மிரளச்செய்த ஒரு தயாரிப்பை, நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே! ..NH ஆயில் எங்கப்பா?!

  சித்தவைத்தியத்தில், விளக்கெண்ணையுடன், வேப்பெண்ணையும் வியாதித்தடுப்பு மருந்தாக, பயன்படுகிறது.

  வேப்பெண்ணை, சிறந்த கிருமிநாசினி, கிராமப்புறங்களில் மக்கள் தலைக்கு வேப்பெண்ணை தடவிவந்த காரணத்தால், அவர்களுக்கு பேன், பொடுகு அரிப்பு ஏற்பட்டதில்லை, தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, கருமைநிறத்தை பேணும் தன்மைமிக்கது. மேலும் நாட்டுச்செக்கு எண்ணைகளின் புண்ணாக்கு எனப்படும் விதைச்சக்கைகள் மாடுகளுக்கு சிறந்ததீவனமாகின்றன.

  தரமான விதைகள் மூலம் தயாராகும் மரசெக்கு எண்ணைகளை பிளாஸ்டிக்பைகளில் இட்டு உபயோகிப்பது கெடுதலாகும், பித்தளை பாத்திரங்கள் அல்லது, எவர்சில்வர் பாத்திரங்களிலிட்டு பயன்படுத்துவதே, சிறப்பாகும்.

  எண்ணைகளில் உயர்வான, "எண்ணைகளின் அரசி" நல்லெண்ணை.

  எல்லா எண்ணைகளும் அவற்றின் விதைகளின் பெயரிலேயே, அழைக்கப்பட்டாலும், எள் எண்ணை மட்டும், நல்லெண்ணை என்று அழைக்கப்படுகிறது.

  மரச்செக்கில் உண்டாக்கிய நல்லெண்ணை, உடலில் உள்ள கொழுப்புத்தன்மையைக் குறைத்து, உடலில் கரையும்வண்ணம் உள்ள கொழுப்புகளின் மூலம் உடல் சக்தியை அதிகரித்து, உடல் செல்களின் புதிய உற்பத்தியைத்தூண்டி, நோய்எதிர்ப்பு சக்தி அளித்து, வயோதிகமடைவதை தடுக்கும் ஆற்றல்மிக்க, ஒரு தாவர எண்ணையாகத் திகழ்வதால்தான், "நல்லெண்ணை" என்று எள் எண்ணையை அழைக்கிறார்கள்.

  கவலை, மனச்சோர்வு உள்ளிட்ட மனவியாதிகளிலிருந்து, இதய வியாதிகள், தோல் வியாதிகள், சுவாசக்கோளாறுகள், மாதவிலக்கு, மூலம் உள்ளிட்ட அனைத்துவகை உடல் பாதிப்புகளையும் சீராக்கி, உடல்நலம் காக்கும் தன்மைமிக்கது, நல்லெண்ணை.

  இதனால்தான் நல்லெண்ணையை, "எண்ணைகளின் அரசி" என்கிறார்கள்.

  மரச்செக்கு எண்ணைகளில், ஒரு தனிவிதமான வாசனையை, அதை உபயோகித்தவர்கள் அறிந்திருப்பர், அது எதனால் தெரியுமா?

  மரச்செக்குகளில், எள் விதைகளை ஆட்டும்போது, ஏற்படும் உராய்வில் உண்டாகும் வெப்பத்தைத்தணிக்கவும், செக்கில் நன்கு அரைபட்ட எள் விதைகளிலிருந்து, எண்ணையைப்பிரித்தெடுக்கவும், சிறிது வெல்லம் அல்லது கருப்பட்டியை சேர்ப்பதே, மரச்செக்கு நல்லெண்ணையின் அற்புத சுவைக்கும், தனித்துவமான வாசனைக்கும், காரணமாக அமைகிறது.

  பெரிய இயந்திரங்களில் செயற்கை முறையில், ரீபைண்ட், டபுள் ரீபைண்ட் என்றுதயாராகும் எண்ணைகளிலுள்ள இரசாயன வேதிப்பொருட்கள் மூலம், மனிதர்களின் உடல்நலம் கெடுக்கும் எண்ணைகள் எல்லாம், விதவிதமான வணிகப்பெயர்களில், மனதை சுண்டியிழுக்கும் விளம்பரங்கள்மூலம், மக்களை முட்டாள்களாக்கி, பல்வேறு வியாதிகளுக்கு உறைவிடமாக மனிதஉடலை மாற்றுகின்றன. இளநரை பாதிப்புகள், மூட்டுவலி, அதிக உடல்எடை, இரத்த அழுத்த பாதிப்புகள் போன்றவை உண்டாக, இந்த எண்ணெய்களின் தயாரிப்பில் சேர்க்கப்படும் இரசாயனங்களே, காரணமாகின்றன.

  பயன்படுத்துவதையே தவிர்க்கவேண்டிய ரீபைண்ட் எண்ணைகளை, ஒருமுறை பயன்படுத்தியபின் மீண்டும், வடை,போண்டா,பஜ்ஜி போன்ற காரவகைகள் மற்றும் இனிப்புகள்செய்ய,வடவம்,வற்றல் பொரிக்க மீண்டும் பயன்படுத்த, வியாதிகளை தேடிப்போய் பெற்றுக்கொள்கிறோம், என்று அர்த்தம்.

  உடலுக்கு நன்மைகள்செய்யும் நாட்டுச்செக்குகளில் உண்டாக்கிய எண்ணைகளை, விலை சற்றுஅதிகமானாலும்கூட வாங்கி, அன்றாட நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திவர, தேவையற்ற வைத்திய செலவுகளைக்குறைக்கலாம்.

  ரீபைண்ட் எண்ணைகளைப்போல மனிதர்க்கு தீங்கு விளைவிக்கும் மற்றொரு எண்ணைதான் தற்போது, வீடுகளில், விளக்கேற்ற பயன்படும் தீபஎண்ணைகள். செயற்கை எண்ணையில் செயற்கைவாசனை இரசாயனக்கலவைகள், மனிதர்களின் சுவாசத்திற்கு பெரும்பாதிப்புகள் கொடுப்பவை.

  வீடுகளில் விளக்கேற்ற, இயற்கை எண்ணைகளான விளக்கெண்ணை, நல்லெண்ணை, தேங்காயெண்ணை, வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை [விளக்கேற்ற] பயன்படுத்துவது, ஆன்மீகரீதியிலும் சிறப்பானதாகும், விலைகுறைவு என்பதால், செயற்கை தீபஎண்ணைகளை வாங்கி, உங்கள் உடல்நலத்திற்கு நீங்களே, ஊறுவிளைவித்துக்கொள்ளாதீர்கள்.

  English summary

  Benefits of Cold Process Oil

  Benefits of Cold Process Oil
  Story first published: Saturday, September 2, 2017, 15:55 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more