வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...

Posted By:

Verkadalai Kara Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசைதான் டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு சட்னி தான் சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். அதுவும் தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, தக்காளி சட்னி போன்றவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வேர்க்கடலை சட்னி பிடிக்குமா? அப்படியெனில் இந்த ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னியை ஒரு தடவை அரைத்துப் பாருங்கள்.

இந்த ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னி வழக்கமான கார சட்னி போல அல்லாமல் சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும் இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும். இந்த பக்குவத்தில் வேர்க்கடலை சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த சட்னியின் தனித்துவமான சுவைக்கு காரணம் அதில் சேர்க்கப்படும் வித்தியாசமான பொருட்கள்தான்.

Verkadalai Kara Chutney Recipe How to Make Andhra Style Verkadalai Kara Chutney

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- ¼ கப் பச்சை வேர்க்கடலை
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 5 சிவப்பு மிளகாய்
- 2 காஷ்மீரி மிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 பெரிய தக்காளி
- ஒரு சிறிய துண்டு புளி
- தேவையான அளவு உப்பு
- 3 பூண்டு பல்
- அரை ஸ்பூன் கடுகு
- ஒரு கொத்து கறிவேப்பிலை

செய்முறை:

- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கால் கப் வேர்கடலையை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

- பின்னர் அதை தனியாக எடுத்து வைக்கவும்.

- பின் அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் 5 வர மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாயை சேர்த்து வதக்கவும்.

- பின்னர் சிறிய துண்டு புளியை சேர்த்து வதக்கவும்.

- இப்போது 1 நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

- வெங்காயம் நிறம் மாறியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

- சிறிதளவு உப்பு சேர்த்து 3 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

- தக்காளி மென்மையாக மாறும் வரை நன்றாக வதக்கவும்.

- அடுப்பை அணைத்து ஆற விடவும்.

- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும்.

- பின்னர் வெங்காயம், தக்காளி கலவையை சேர்க்கவும்.

- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

- இந்த தாளிப்பை சட்னியில் கொட்டி நன்கு கிளறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 4, 2026, 21:45 [IST]
Desktop Bottom Promotion