1 கப் தயிர் வெச்சு.. சப்பாத்தி, பூரிக்கு இந்த சைடுடிஷ் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க

Posted By:

Curd Masala Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு வழக்கமாக செய்யும் சைடு டிஷ்ஷை செய்யாமல், வித்தியாசமாகவும் அதே சமயம் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?

தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால், உடலுக்கு குளிர்ச்சியாக சமைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா? உங்கள் வீட்டில் தயிர் உள்ளதா? அப்படியானால் அந்த தயிரைக் கொண்டு வெறும் 10 நிமிடத்தில் சூப்பரான சைடுடிஷ் செய்யலாம். இந்த சைடு டிஷ் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

Thayir Masala Curry How To Make a Curd Masala Curry Recipe

எனவே நிச்சயம் இந்த ரெசிபியை நீங்கள் இதுவரை செய்திருக்கமாட்டீர்கள். ஆனால் ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் சுவையாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு தயிர் மசாலா கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் மசாலா கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பூண்டு மிளகாய் மசாலாவிற்கு...

* பூண்டு - 15 பல்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* தயிர் - 400 கிராம்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் இடி உரல் அல்லது மிக்சர் ஜாரில் பூண்டு பற்கள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் தயிரை எடுத்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு மசாலாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில் வைத்து கிளற வேண்டும்.
* அடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான தயிர் மசாலா கறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, April 18, 2025, 7:15 [IST]
Desktop Bottom Promotion