ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Ragi Poori With Onion Masala In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி கோதுமை மாவை கொண்டு தான் பூரி செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை ராகி மாவு கொண்டு பூரி செய்து பாருங்கள். இந்த பூரி மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட.

கோடையில் ராகியை உணவில் தினசரி சேர்த்து வருவது நல்லது. எப்போதும் ராகி கூழ், ராகி ரொட்டி, ராகி இட்லி என்று செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இப்படி ராகி பூரி செய்து சாப்பிடுங்கள். இந்த ராகி பூரிக்கு வெங்காய மசாலா அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

Ragi Poori With Onion Masala How To Make Ragi Poori With Vengaya Masala

உங்களுக்கு ராகி பூரி மற்றும் வெங்காய மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பூரி மற்றும் வெங்காய மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பூரிக்கு...

* ராகி மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வெங்காய மசாலாவிற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ராகி மாவு மற்றும் 1 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 டீஸ்பூன் எண்ணெயை மேலே ஊற்றி தடவி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதற்குள் மசாலா செய்துவிடலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சோம்பை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, நன்கு 5-8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு கடலை மாவை நீரை கட்டிகளின்றி கரைத்து, அதில் ஊற்றி, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* மசாலாவானது கெட்டியானதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வெங்காய மசாலா தயார்.
* இறுதியாக பிசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை சேர்த்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ராகி பூரி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 18, 2026, 7:07 [IST]
Desktop Bottom Promotion