பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!

Posted By:

Bun Dosa and Poondu Kara Chutney Recipe in Tamil: காலையில் டிபன் செய்ய இட்லி, தோசை மாவு இல்லையா? அப்போது பூரி, பொங்கல் என்று செய்வதற்கு பதிலாக, வீட்டில் ரவையும், தயிரும் இருந்தால், பன் தோசையை ட்ரை செய்யுங்கள். இந்த தோசையை செய்வது மிகவும் சுலபம், மேலும் இது பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.

இந்த தோசைக்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும். முக்கியமாக இப்படி தோசை செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட வீட்டில் எல்லோரும் அதிகமாக சாப்பிடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள் காலையில் தாமதமாக எழுந்துவிட்டால், டக்கென்று ஒரு காலை டிபன் செய்ய நினைத்தால், இதை செய்யலாம். அதேசமயம் வித்தியாசமான காலை உணவை செய்ய விரும்புபவர்களும் இதை முயற்சிக்கலாம்.

Bun Dosa and Poondu Kara Chutney Recipe How to Make Bun Dosa and Poondu Kara Chutney

உங்களுக்கு பஞ்சு போன்ற பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை மற்றும் பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பன் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

- ரவை - 1 கப்
- தயிர் - 3/4 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி இலைகள் - 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு

பூண்டு கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

- வரமிளகாய் - 10
- காஷ்மீரி வரமிளகாய் - 4
- வர மிளகாய் - 4
- பூண்டு பல் - 20
- உப்பு - தேவையான அளவு
- தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 10
- தண்ணீர் - சிறிதளவு

தாளிக்க:

- நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்த்ம் பருப்பு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

- ஒரு அகலமான பாத்திரத்தில், 1 கப் ரவை மற்றும் 3/4 கோப்பை தயிர் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவற்றை நன்றாகக் கலக்கவும்.

- ரவையானது தயிரில் உள்ள திரவம் முழுவதையும் உறிஞ்சி எடுக்கும் வரை, அதை அப்படியே ஊறவிடவும்.

- ரவைக் கலவையை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான மற்றும் கெட்டியான மாவாக அரைத்தெடுக்கவும்.

- அரைத்த ரவை மாவை மீண்டும் அதே கலவை கிண்ணத்திற்கு மாற்றி, தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு கடாயில், மிதமான தீயில் மூன்று ஸ்பூன் எண்ணெயை சேர்க்கவும்.

- எண்ணெய் சூடானதும், 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 1 ஸ்பூன் கடுகு மற்றும் 1 ஸ்பூன் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் 1 ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போன்ற பதம் அடையும் வரை வதக்கவும்.

- பின்னர் 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

- இந்த தாளிப்பை, முன்னரே தயார் செய்து வைத்திருந்த ரவை மாவுடன் சேர்க்கவும். 1 மேசைக்கரண்டி அரிசி மாவைச் சேர்த்து, நன்றாக கலக்கவும்.

- ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, மாவு முழுவதும் பரவும் வகையில் நன்றாகக் கலக்கவும்.

- ஒரு குழிவான கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் 1/2 கப் தோசை மாவை ஊற்றி, 1 முதல் 2 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

- ஒரு பக்கம் வெந்ததும், தோசையைப் புரட்டிப் போட்டு, மேலும் ஒரு நிமிடம் பொன்னிறமாக வேக விடவும்.

- இருபுறமும் பொன்னிறமானதும் பன் போல உப்பியிருக்கும் தோசையை கல்லிலிருந்து தட்டுக்கு மாற்றவும்.

பூண்டு கார சட்னியின் செய்முறை:

- முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், வர மிளகாய், பூண்டு சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

- பின்னர் அதில் சிறிது தண்ணீரை சேர்த்து தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- பின் அதில் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பூண்டு கார சட்னி தயார்.

- இந்த பூண்டு கார சட்னி பஞ்சு போன்ற பன் தோசைக்கு அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion