4 கத்திரிக்காயும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Kathirikkai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வழக்கமாக செய்வது போன்று தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த சட்னியை செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த சட்னி ரொம்பவும் பிடிக்கும்.

Kathirikkai Chutney How To Make Spicy Brinjal Chutney

உங்களுக்கு கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 12
* பூண்டு - 4-5 பல்
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* சிறிய உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* கத்திரிக்காய் - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - தேவையான அளவு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் காய்கறிகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்ற வேண்டும்.
* பிறகு அதில் 1/2 டீஸ்பூன் சோம்பு, 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதிகப்படியான நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வேக வைத்த காய்கறிகளை மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.
* அதன் பின் எடுத்து வைத்துள்ள நீரை ஊற்றி கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* இறுதியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து லேசாக வதக்கி இறக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் கடையலுடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் சட்னி அல்லது கத்திரிக்காய் கடையல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, March 23, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion