Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா?

Tamil Nadu Election 2026: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கி விட்டது. ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளுக்கிடையே கூட்டணி தொடர்பான சிக்கல்கள் நிலவினாலும் தமிழ்நாடு முழுவதும் அரசியல்வாதிகளும், பொது மக்களும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆர்வமாக உள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தல் நான்கு முனைப் போட்டியாக இருக்கப்போவதால் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சுவாரஸ்யமான தேர்தலாக இருக்கப்போகிறது.

இந்த தேர்தலில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. ஏனெனில் கிட்டதட்ட 74 லட்சம் ஓட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் மற்றும் தொகுதிகளின் நிலை மாறியுள்ளது. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதி மற்றும் குறைவான வாக்காளர் கொண்ட தொகுதிகளும் தற்போது மாறியுள்ளது.

Tamil Nadu Election 2026 Top Five Districts by Voter Population in Tamil Nadu

சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம்

பிப்ரவரி 2026-ல் வெளியிடப்பட்ட 'சிறப்புத் திருத்தப் பணி' (SIR) பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி திருமதி அர்ச்சனா பட்நாயக், விரிவான சிறப்புத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு, பிப்ரவரி 28, 2026 அன்று '2026-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை' அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதன்படி தற்போது தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்-பெண் வாக்காளர்கள்

சிறப்பு சீர்திருத்த பணிக்குப் பின் தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 தகுதிபெற்ற வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.77 கோடியாகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.89 கோடியாகவும் உள்ளது மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,617 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 12.51 லட்சம் இளம் வாக்காளர்கள், 4.63 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட 3.99 லட்சம் மூத்த குடிமக்களும் இடம்பெற்றுள்ளனர். இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை நீக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட 'சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையின்' (SIR) போது, ​​மொத்தம் 74,07,202 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள்

திருவள்ளூர்

தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட மாவட்டமாக திருவள்ளூர் முதலிடத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், 15,44,710 ஆண்கள், 16,12,090 பெண்கள் மற்றும் 613 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 31,57,413 வாக்காளர்களுடன் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளது, அவை முறையே கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி , ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகும்.

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் தற்போது 28,30,936 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,65,763 ஆண்கள், 14,64,344 பெண்கள், 829 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். சென்னையில் மட்டும் மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன, அவை R.K. நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு-வி-கா-நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகும்.

சேலம்

தமிழ்நாட்டின் மாம்பழம் என்று அழைக்கப்படும் சேலம் அதிக வாக்களர்களைக் கொண்ட மூன்றாவது மாவட்டமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் 27,55,830 வாக்காளர்கள் உள்ளனர்., அதில் ஆண்கள் 13,70,962, பெண்கள் 13,84,548 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 320 பேர் அடங்குவர். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், எடப்பாடி, கங்கவல்லி, மேட்டூர், ஓமலூர், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சங்கரி, வீரபாண்டி, மற்றும் ஏற்காடு என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

கோயம்பத்தூர்

தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்பத்தூர் மாவட்டம் 26,96,813 வாக்காளர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 13,00,889, பெண் வாக்காளர்கள் 13,95,396 மற்றும் 528 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். கோவையில் மொத்தம் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை (வடக்கு), தொண்டாமுத்தூர், கோவை (தெற்கு), சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

மதுரை

தமிழ்நாட்டின் தூங்காநகரம் என்று அழைக்கப்படும் மதுரை 24,66,954 வாக்காளர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 12,08,651 ஆண்கள், 12,58,051 பெண்கள், 252 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். இதில் மதுரை சென்ட்ரல், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மேலூர், சோழவந்தான் , திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி என மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

Desktop Bottom Promotion