மழைக்காலத்தில் பரவும் எலி காய்ச்சல்.. அலட்சியம் செய்யக்கூடாத 7 அறிகுறிகள்!

Monsoon Health Alert Rat Fever: வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து நீர் தேங்கியுள்ளது. பொதுவாக மழை பெய்யும் போது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு சிரமப்படக்கூடும். குறிப்பாக கனமழை பெய்து சாலைகளில் நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்பதால், டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் போன்ற பல்வேறு கிருமிகளின் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். அதில் முக்கியமாக லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) எனப்படும் தோல்நோயால் பாதிக்கப்படக்கூடும்.

Monsoon Health Alert Rat Fever Early Symptoms Causes and Prevention

இதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஆனால் இன்னும் நிறைய பேருக்கு இந்த லெப்டோஸ்பைரோசிஸ் குறித்த விழிப்புணர்வு இல்லை. இந்த நோயின் அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த வகை தொற்று மழைக்காலத்தில் தேங்கும் நீரின் மூலம் பரவக்கூடியது. இப்போது இந்த லெப்டோஸ்பைரோசிஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, இதை எப்படி கண்டறிவது, தடுப்பு வழிகள் என்னவென்பது குறித்து விரிவாக காண்போம்.

லெப்டோஸ்பைரோசிஸ் என்றால் என்ன?

லெப்டோஸ்பைரோசிஸ் சில சமயங்களில் எலி காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தொற்று மழை பெய்து தேங்கும் வெள்ள நீரில் கசிந்து பரவும் எலி, நாய், பன்றி போன்ற விலங்குகளின் சிறுநீரில் உள்ள ஒரு வகையான பாக்டீரியாவால் ஏற்படுகிறது. ஒருவர் தண்ணீரில் நடக்க நேரிட்டாலோ அல்லது அதிக நேரம் செலவழித்தாலோ, இது திறந்த காயம் அல்லது கீறல் வழியாக மனித உடலுக்குள் பரவுகிறது. கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவை மற்ற வழிகளாகவும் இருக்கலாம். இந்த தொற்றுக்கு உடனடி சிகிக்கை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.

எலி காய்ச்சலின் அறிகுறிகள்

1. அதிக காய்ச்சல்
2. தலைவலி
3. தசை அல்லது மூட்டுகளில் வலி
4. வாந்தி, குமட்டல்
5. குளிர் நடுக்கம்
6. வயிற்றுப்போக்கு
7. சிவந்த அல்லது எரிச்சலூட்டும் கண்கள்

லெப்டோஸ்பைரோசிஸ் தொற்று ஏற்பட்டால், அதன் அறிகுறிகளானது டெங்கு, ப்ளூ போன்றவற்றை போன்றே இருக்கும். அதுவும் ஆரம்பத்தில் சளி, காய்ச்சலாக இருப்பதால், பலரும் மருத்துவரிடம் செல்வதற்கு பதிலாக, தாங்களாகவே மருந்துகளை எடுத்து கொள்வார்கள். ஆனால் இது சாதாரண சளி, காய்ச்சலாக இருந்தால் ஓரிரு நாட்களில் சரியாகும். அதுவே எலி காய்ச்சலாக இருந்தால், அறிகுறிகளானது மேலும் தீவிரமாகும். எனவே எலி காய்ச்சலுக்கான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

சிகிச்சை முறைகள்

எலி காய்ச்சலுக்கு மருத்துவர்கள் அதன் அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை தொடங்குவார். அதில் பொதுவாக ஆன்டி-பயாடிக் உடன், பிற வகை சிகிச்சைகளும் அடங்கும். இப்படி வழங்கும் ஆன்டி-பயாடிக்கை மருத்துவர் பரிந்துரைத்த படி முழுமையாக எடுக்க வேண்டும். ஒருவேளை கடுமையான பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவமனையில் அனுமதிப்பதும், நரம்பு வழி நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுப்பதும் தேவைப்படலாம்.

எலி காய்ச்சலால் ஏற்படும் சிக்கல்கள்

எலி காய்ச்சலுக்கு போதுமான சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் நிலைமை தீவிரமாகி, பின்வரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அவையாவன:

* கடுமையாக சிறுநீரக செயலிழப்பு
* கல்லீரல் செயலிழப்பு
* நுரையீரல் இரத்தப்போக்கு
* இரத்த உறைவு
* த்ரோம்போசைட்டோபீனியா
* குறைவான இரத்த அழுத்தம்

தடுப்பது எப்படி?

* எலி காய்ச்சலை தடுக்க வெள்ள நீர் அல்லது சேற்றில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* ஒருவேளை வெள்ள நீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பு காலணிகளை அணிய வேண்டும்.
* கால்களில் காயங்கள் இருந்தால், அசுத்தமான நீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.
* வெளியே சென்று மாசுபட்ட நீருடன் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வந்ததும் சுத்தமான நீரால் சோம்பு பயன்படுத்தி நன்கு குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

மொத்தத்தில் லெப்டோஸ்பைரோசிஸ் குணப்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அது உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது என்பதால், மழைக்காலத்தில் காய்ச்சல், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்டால், சுயமாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல், ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகினால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்க முடியும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, November 2, 2026, 13:32 [IST]
Desktop Bottom Promotion