For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலைக்கு போறீங்களா?.. குழந்தைகளையும் கவனிங்க!

By Mayura Akilan
|

Working Parents
பொருளாதார தேவைக்காக இளம் தலைமுறை பெற்றோர்கள் இன்றைக்கு பணிக்கு செல்லவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சரியான அன்பும், பராமரிப்பும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பணம் சம்பாதித்தால் போதும் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்துவிடலாம் என்று பெற்றோர்கள் எண்ணுகின்றனர். இங்குதான் அநேகம் பேர் தவறிழைக்கின்றனர். குழந்தை வளர்ப்பது குறித்து ஆலோசனை தெரிவிக்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

அன்பே மூலதனம்

ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஆரோக்கியமான சூழல்

அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்" செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது. ஒரே மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

தோல்வியை சந்திக்கும் பக்குவம்

குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்" என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி"யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

பணத்தின் அவசியம்

பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி" கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

பிரச்சினைக்கு தயார்படுத்துங்கள்

பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினையின் மூலத்தையும் அதற்கான தீர்வினையும் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

ஒப்பிட்டு பேசவேண்டாம்

கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது. குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

English summary

Child care tips for working parents | வேலைக்கு போறீங்களா?.. குழந்தைகளையும் கவனிங்க!

As part of our commitment to our young parents, Get Ahead presents a guide to childcare for working couples. This is the first in an ongoing series. your child's real needs will not be fulfilled by money alone. Spend time with your child. Watch him/her grow. Be an active part of that growing process!
Story first published: Wednesday, February 8, 2012, 18:44 [IST]
Desktop Bottom Promotion