For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் ரொம்ப விருப்பமா? அப்ப உங்க ஆரோக்கியம்?

போதுமான உடல் உழைப்பில்லாமல் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் ஷாப்பிங்க் செய்வதால் உண்டாகும் உடல் நலக் கெடுகளை இந்த கட்டுரை விவரிக்கின்றது.

By Ambika Saravanan
|

சர்வம் சக்தி மயம் ! என்று கூறுவர் . ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் , சர்வம் இன்டர்நெட் மயம் . எல்லாமே கிடைக்கிறது இன்டர்நெட் வழியாக. ஆன்லைன் வழியாக நாம் எண்ணற்ற செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். டிக்கட் புக்கிங், பாங்கிங், ஆன்லைன் பில்லிங், ஆன்லைன் பேமெண்ட் என்று வெளியில் கியூவில் நின்று வேர்க்க விறுவிறுக்க நாம் செய்த வேலைகள் அனைத்தும் இன்று ஒரு சிறு பெட்டி வழியாக மின்விசிறிக்கு அடியில் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

இவைகள் எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று - ஷாப்பிங் . அதுவும் இன்று ஆன்லைன் மயம் தான். நமக்கு பிடித்த பொருட்களை தேர்வு செய்ய ஒரே ஒரு க்ளிக் .. நமது வீட்டின் வரவேற்பறைக்கு வந்து சேர சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள்.. இது என்ன மேஜிக்கா ?

Online shopping makes people weak and lazy

எதையும் நாம் தேடி போக அவசியமில்லை. சாப்பாடு முதல் சன் நெட்ஒர்க் கன்னெக்ஷன் வரை. எல்லாமே கிடைக்கும் ஆன்லைனில்.. இதனால் நாம் அடைவது என்ன? நேரம் மிச்சம். அலைச்சல் கிடையாது. நமக்கு தேவையானது நாம் தெருவில் இறங்கி நடக்காமல் நமது வீட்டு வாசற்படி வரை ஒருவர் கொண்டு வந்து தருகிறார். வேறென்ன வேண்டும், இந்த வசதிகளை தாண்டி என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாகும்போது நமது உடல் நலிவடையும். தசைகள் கெட்டுப்போக தொடங்கும். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? மேலும் படியுங்கள். உங்களுக்கே புரியும்.

வீட்டில் இருந்துகொண்டு எல்லா பொருட்களையும் ஆன்லைனில் வாங்கி கொள்வதால் நமது நடை குறைக்கப்படுகிறது. தசைகளுக்கான பயிற்சிகள் முற்றிலும் தடைபடுகிறது.

2000 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 65 வயதிற்கு மேற்பட்ட 24% பேர் தங்கள் அன்றாட பயிற்சிகளை செய்வதே இல்லை என்று கூறுகின்றனர். இதனால் அவர்கள் உடல் நலத்தில் தொல்லைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங் என்பது வசதியானது தான் . என்றாலும், இதனால், நாம் தினசரி செய்யும் வேலைகள் குறைவதால் நமது தசைகள் பலவீனமடைகின்றன. கடைக்கு சென்று மளிகை சாமான் வாங்கும்போது வீடு வரை சாமான் பையை சுமந்து வருவோம். இது தசைகளுக்கு ஒரு வித பயிற்சியாக இருந்தது. ஆனால் தற்போது, அதனை சுமந்து வந்து வீட்டிற்குள் கொடுக்க ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு எதிரான பதிவாக இது எழுதப்படவில்லை. நமது உடல் ஆரோக்கியத்திற்காக சொல்லப்படும் விஷயம் தான் இது. நாம் ஜிம்முக்கு சென்று பளு தூக்கினால் தான் தசைகள் பலமாகும் என்பதில்லை.

நமது தினசரி வாழ்வில் கூட நமது தசைகளை வலிமை படுத்தும் பயிற்சிகள் உண்டு. தோட்டத்தில் செடி வைக்க மண் தோண்டினாலும், நீர் பாய்ச்சினாலும், நாற்காலியில் 10 முறை ஏறி இறங்கினாலும், எல்லாமே பயிற்சிதான்.

தேசிய சுகாதார அமைப்பு உடல் வலிமைக்கு வாரத்திற்கு இரண்டு பயிற்சிகளை பரிந்துரைக்கிறது. அது பளு தூக்கும் பயிற்சியாக இருக்கலாம் அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை நாமே சென்று வாங்குவதாக இருக்கலாம்.

30வயதின் தொடக்கத்தில், எலும்புகள் வலிமை குறைய தொடங்கும். 40 வயதிற்கு மேல் தசைகளின் எடை சுருங்க தொடங்கும் . வேலைகள் இல்லாமல் இருக்கும்போது தசை கூட்டு நிலை உண்டாகும். மனித உடல் செய்யும் வேலையை குறைக்கும்போது இந்த பாதிப்பு உண்டாகும்.

வயதானவர்கள் தான் இந்த பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதில்லை. இளம் வயதில் இருந்து இந்த பழக்கத்தை மேற்கொள்ளும்போது வயது அதிகரிக்கும்போது, பல உடல் பிரச்சனைகள் வாராமல் தவிர்க்கலாமே.

வயதானவர்கள் அடிக்கடி தவறி கீழே விழுவதை நாம் கண்டிருப்போம். இது அவர்களின் தசையில் உண்டாகும் பலவீனத்தை காட்டுகிறது. எனவே, தசை வலிமை அதிகரிக்க , உடல் உழைப்பு அவசியம் தேவை. முடிந்தவரை நமது வேலைகளை நாமாக செய்ய முயற்சிப்போம்.

மொபைல் ரீசார்ஜ் , மின்சார கட்டணம் செலுத்துவது, பேங்க் போவது, காய்கறி வாங்குவது, மளிகை சாமான் வாங்குவது, போன்ற வேலைகளை நாமே நடந்து சென்று செய்யும்போது உடல் உழைக்க தொடங்கி, தசைகள் வலுவாகின்றன. நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆன்லைனில் இதற்காக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தையும் தவிர்க்கலாம்.

English summary

Online shopping makes people weak and lazy

Online shopping makes people weak and lazy and it leads to health issues
Story first published: Saturday, October 7, 2017, 14:47 [IST]
Desktop Bottom Promotion