Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
ஒன் சைடு லவ், பிரபோஸ் பண்ண வெட்கப்படுற பசங்களுக்கு வள்ளுவர் என்ன சொல்றாரு பாருங்க!
காதல் தோல்வியா? வெட்கப்பட்டா ஆகுமா பாஸ்... - வள்ளுவர் என்ன சொல்றாரு பாருங்க!
காதல் தோல்வி இல்லாத ஆண்களே இருக்க முடியாது. குறைந்தபட்சம் கிரஷ் தோல்வி, பிரபோசல் தோல்வியாவது இருக்கும். சொல்லிப் பிரிந்த காதல், காதலித்துப் பிரிந்தக் காதல்களை விட, சொல்லாமலே கடந்த காதல்கள் தான் அதிகம். பெரும்பாலும், இந்த ஒன் சைடு காதலர்களை கேலி, கிண்டல் செய்வதே சமூகத்திற்கு பழக்கமாக இருக்கிறது. ஒன்று மட்டுமல்ல, சங்கக்காலத்தில் இருந்தே.
இதற்கு காரணம், அவன் காதல் வெற்றிப் பெறாதது, மற்றும் அவனுள் இருக்கும் வலியானது என்ன என்பதை புரியாது இருப்பது தான். இது திருவள்ளுவரும் கூட அறிந்திருப்பார் போல. அதனால் தான் நாணுத்துறவுரைத்தல் என்ற அதிகாரத்தின் மூலமாக, ஒருதலை காதலில் சோகத்தில் இருக்கும் வலியைக் குறித்து விளக்கிக் கூறியிருக்கிறார்.

குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.
மு.வரதராசனார் உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

குறள் 1132:
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.
மு.வரதராசனார் உரை:
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

குறள் 1133:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.
மு.வரதராசனார் உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
சாலமன் பாப்பையா உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

குறள் 1134:
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.
மு.வரதராசனார் உரை:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

குறள் 1135:
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.
மு.வரதராசனார் உரை:
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
சாலமன் பாப்பையா உரை:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

குறள் 1136:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
மு.வரதராசனார் உரை:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.
மு.வரதராசனார் உரை:
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

குறள் 1138:
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.
மு.வரதராசனார் உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.
சாலமன் பாப்பையா உரை:
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

குறள் 1139:
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.
மு.வரதராசனார் உரை:
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

குறள் 1140:
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.
மு.வரதராசனார் உரை:
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!



Click it and Unblock the Notifications











