காமத்துப்பாலில் திருவள்ளுவர் கூறியிருக்கும் சூப்பர் காதல் டிப்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

காமத்துப் பால் என்றதுமே அது கொஞ்சிக்குலாவி கட்டிலில் மகிழ்வதை பற்றியும், ஆண், பெண் புணர்தல் பற்றியது மட்டுமே என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், அதில் பெண்மை காதலின் அழகு, என காதலும், இல்லற பந்தமும் குறித்து திருவள்ளுவர் பெரிய கருத்துக்களை இரண்டே வரிகளை விவரித்துக் கூறியுள்ளார்.

காதல் என்பது என்ன? காதலி என்பவள் யார்? காதலின் அழகும், காதலியின் அழகும் எத்தைகையது? காதலானது எப்படி இருக்கிறது? அதன் அழகையும், சிறப்பையும் காமத்துப் பாலில் காதற்சிறப்புரைத்தல் அதிகார குறள்களில் திருவள்ளுவர் கூறியுள்ளவை.

இனி, காதற்சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்கள் மற்றும் அதற்கு கலைஞர், மு.வ மற்றும் சாலமன் பாப்பையா கூறியிருக்கும் விளக்க உரைகள் குறித்தும் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறள் 1121:

குறள் 1121:

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

மு.வரதராசனார் உரை:

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.

குறள் 1122:

குறள் 1122:

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.

மு.வரதராசனார் உரை:

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

சாலமன் பாப்பையா உரை:

என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.

குறள் 1123:

குறள் 1123:

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!.

மு.வரதராசனார் உரை:

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை:

என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

குறள் 1124:

குறள் 1124:

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.

மு.வரதராசனார் உரை:

ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

சாலமன் பாப்பையா உரை:

என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.

குறள் 1125:

குறள் 1125:

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.

மு.வரதராசனார் உரை:

போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!.

சாலமன் பாப்பையா உரை:

ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.

குறள் 1126:

குறள் 1126:

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்

நுண்ணியர்எம் காத லவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

மு.வரதராசனார் உரை:

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

சாலமன் பாப்பையா உரை:

என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.

குறள் 1127:

குறள் 1127:

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

மு.வரதராசனார் உரை:

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.

சாலமன் பாப்பையா உரை:

என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

குறள் 1128:

குறள் 1128:

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.

மு.வரதராசனார் உரை:

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை:

என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

குறள் 1129:

குறள் 1129:

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும்இவ் வூர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்.

மு.வரதராசனார் உரை:

கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை:

என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

குறள் 1130:

குறள் 1130:

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னும்இவ் வூர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு

மு.வரதராசனார் உரை:

காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

சாலமன் பாப்பையா உரை:

என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Love Special: What Thiruvalluvar Said About Love in His Kadharsirappuraithal?

Love Special: What Thiruvalluvar Said About Love in His Kadharsirappuraithal?
Story first published: Saturday, December 16, 2017, 17:32 [IST]