1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. தோசை, சப்பாத்திக்கு இப்படியொரு சைடு டிஷ்ஷை ட்ரை பண்ணுங்க...

Posted By:

Toor Dal Kurma Recipe In Tamil: தோசை, சப்பாத்தி, இட்லிக்கு எப்பவும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அடிக்கடி ஏதாவது வித்தியாசமான சுவையைக் கொண்ட சைடு டிஷ்ஷை செய்ய விரும்புவீர்களா? அப்படியானால் அடுத்த முறை துவரம் பருப்பை வெச்சு ஒரு குருமாவை ட்ரை பண்ணுங்கள்.

இந்த துவரம் பருப்பு குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது வேலைக்கு செல்பவர்கள் செய்வதற்கு ஏற்றவாறு சுலபமாக இருக்கும்.

Toor Dal Kurma How To Make a Thuvaram Paruppu Kurma Recipe

உங்களுக்கு துவரம் பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/4 கப்
* தேங்காய் - 1/4 மூடி
* வரமிளகாய் - 2

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய் மற்றும் ஊற வைத்த துவரம் பருப்பை நீருடன் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கல்பாசி, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான துவரம் பருப்பு குருமா தயார்.

Image Courtesy: Micoope

[ of 5 - Users]
Story first published: Monday, April 1, 2024, 14:06 [IST]
Desktop Bottom Promotion