ஒருடைம் இந்த தக்காளி பூண்டு தொக்கு செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது..

Posted By:

Thakkali Poondu Thokku Recipe In Tamil: தினமும் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து செய்ய போரடிக்கிறதா? ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடும்படியான ஒரு சைடு டிஷ்ஷை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், பூண்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.

இப்படி தக்காளி பூண்டு தொக்கு செய்யும் போது, அதை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சூடான சாதத்தெதுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இதில் பூண்டு அதிகம் சேர்ப்பதால், சத்தானதும் கூட. இந்த தொக்கை செய்த உடனே சாப்பிடுவதை விட, நன்கு குளிர்ந்த பின் அல்லது மறுநாள் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Thakkali Poondu Thokku How To Make a Thakkali Poondu Thokku Recipe

உங்களுக்கு தக்காளி பூண்டு தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பூண்டு தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தக்காளி - 4
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 1 கைப்பிடி

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை வெட்டி போட்டு, அத்துடன் புளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் 1 கையளவு பூண்டு பற்களை சேர்த்து, அதையும் நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் 10 பல் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போக 5-8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 8 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி பூண்டு தொக்கு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 26, 2026, 20:24 [IST]
Desktop Bottom Promotion