மணமணக்கும்.. ருசியான.. சுண்டக்காய் உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Sundakkai Urundai Kuzhambu Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் மதியம் என்ன சமைப்பது என்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? அதேப் போல் தினமும் ஒரே மாதிரியான சுவையில் குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் சுண்டக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுண்டக்காயைக் கொண்டு சற்று வித்தியாசமாக உருண்டை குழம்பை செய்யுங்கள். இப்படி செய்யும் போது சுண்டக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sundakkai Urundai Kuzhambu How To Make a Sundakkai Urundai Kulambu

உங்களுக்கு சுண்டக்காய் உருண்டை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டக்காய் உருண்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

உருண்டைக்கு...

* சுண்டக்காய் - 200 கிராம்
* கடலைப்பருப்பு - 100 கிராம்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 7 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

குழம்பிற்கு...

* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 20 பல்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (அரைத்தது)
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறாக கரைத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சை சுண்டக்காயை தட்டி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் கடலைப் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வரமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் சுண்டக்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் உருட்டி வைத்துள்ள ஒரு உருண்டையை எடுத்து, குழம்பில் போட்டு கரைத்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, 5-8 நிமிடம் உருண்டையை வேக வைத்து இறக்கினால், சுவையான சுண்டக்காய் உருண்டைக் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 16, 2025, 14:10 [IST]
Desktop Bottom Promotion