கறி சுவையை மிஞ்சும் பன்னீர் பெப்பர் மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Spicy Panner Pepper Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் பெப்பர் மசாலாவை செய்யுங்கள்.

இந்த மசாலா சப்பாத்தி, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இதில் மிளகு சேர்த்திருப்பதால், சளி பிடித்திருக்கும் போது சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக இந்த பன்னீர் பெப்பர் மசாலா செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Spicy Panner Pepper Masala How To Make a Spicy Panner Pepper Masala Recipe

உங்களுக்கு பன்னீர் பெப்பர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பெப்பர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 200 கிராம்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 2
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு + 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பட்டை - 1 சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் சமாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் பன்னீரை சற்று பெரிய சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் இடிகல்லில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளை சேர்த்து ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்கி, பின் சிறிது நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, நீர் வற்றும் வரை கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பன்னீர் பெப்பர் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, February 6, 2025, 21:16 [IST]
Desktop Bottom Promotion