பீர்க்கங்காய் வாங்குனா.. ஒருவாட்டி இந்த சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்...

Posted By:

Peerkangai Paruppu Kari Recipe In Tamil: கோடைக்காலத்தில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். அப்படி நீர்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி தான் பீர்க்கங்காய். இந்த பீர்க்கங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம்.

அதில் ஒன்று தான் பீர்க்கங்காய் பருப்பு கறி. இது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இதுவரை பீர்க்கங்காய் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இதை செய்து கொடுக்கும் போது கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Peerkangai Paruppu Kari How To Make a Ridge Gourd Paruppu Kari

உங்களுக்கு பீர்க்கங்காய் பருப்பு கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் பருப்பு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 100 கிராம்
* பச்சை மிளகாய் - 4
* பீர்க்கங்காய் - 2
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி நீர் - 50 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 1/2 டம்ளர்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2

தாளிப்பதற்கு...

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி

செய்முறை:

* முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதன் நடுவே உள்ளே விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் 100 கிராம் துவரம் பருப்பை எடுத்து, நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கீறிய 4 பச்சை மிளகாய் மற்றும் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், புளி நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 2 1/2 டம்ளர் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, குக்கரை அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* கொதி வருவதற்குள் 2 தக்காளியை பொடியாக நறுக்கி, அதையும் குக்கரில் சேர்க்க வேண்டும்.
* கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் விசில் போனதும், குக்கரைத் திறந்து, கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூளை சேர்த்து கிளறி, பருப்புடன் சேர்த்து கிளறி, 1 கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து கிளறினால், சுவையான பீர்க்கங்காய் பருப்பு கறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 24, 2025, 20:55 [IST]
Desktop Bottom Promotion