For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடைமிளகாய் கீமா: ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபி

By Maha
|

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இந்த மாதம் இஸ்லாமியர்கள் நோன்பை மேற்கொள்வார்கள். பொதுவாக ரம்ஜான் என்றால் அனைவருக்கும் பிரியாணி மட்டும் தான் ஞாபகம் வரும். அதிலும் இஸ்லாமியர்கள் மட்டனைக் கொண்டு தான் பிரியாணி செய்வார்கள். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை முயற்சித்து பார்க்கலாமே!

அதுவும் இந்த மட்டன் ரெசிபியானது குடைமிளகாய் மற்றும் கீமா கொண்டு செய்யப்படுவதாகும். இதற்கு குடைமிளகாய் கீமா என்று பெயர். சரி, இப்போது அந்த குடைமிளகாய் கீமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா - 500 கிராம்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன் (அடித்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, குடைமிளகாய் போட்டு மீண்டும் 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

அடுத்து, கீமாவை நன்கு நீரில் கழுவி வாணலியில் போட்டு, கீமாவுடன் அனைத்து பொருட்களும் ஒன்று சேருமாறு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் மிளகாய் தூள், வெந்தயக் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

இறுதியில் தயிரை ஊற்றி நன்கு கிளறி, மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து, மட்டன் வெந்து, நீர் ஓரளவு சுண்டியப் பின் இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான குடைமிளகாய் கீமா ரெடி!!!

English summary

Capsicum Keema: Ramzan Special Recipe

Celebrate the auspicious month of Ramzan with this unique and delicious recipe of capsicum keema. The flavour of capsicum with the mutton keema makes a tempting combination. Here is the Capsicum Keema Recipe. Check out...
Desktop Bottom Promotion