நாவூறும் மட்டன் மசாலா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

Mutton Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போது மட்டன் எடுத்தாலும், மட்டன் குழம்பு, வறுவல், சுக்கா என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மட்டன் மசாலா செய்யுங்கள். அதுவும் தனியாக மசாலா அரைத்து செய்யும் போது, அந்த மட்டன் மசாலா மிகவும் ருசியாக இருக்கும். இந்த மட்டன் மசாலாவானது இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Mutton Masala How To Make Simple And Delicious Mutton Masala

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* மட்டன் - 3-4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 4
* பட்டை - 1 துண்டு
* சின்ன வெங்காயம் - 20
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 10 பல்
* சின்ன தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 1
* பட்டை - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் குக்கரில் மட்டனை கழுவி சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, ஒருமுறை அரைத்து, பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து கலந்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான மட்டன் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, March 1, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion