1 கப் ரவை இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் காரா பாத் செய்யுங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்...ட்ரை பண்ணுங்க...!

Posted By:

Khara Bath Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை டிபன் என்றால் அது இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். ஒரு மாறுதலுக்கு ஏதாவது செய்யலாம் என்றால் உப்புமாதான் எளிய வழி. ஆனால் உப்புமா என்றாலே பயப்படுபவர்கள்தான் அதிகம். ரவாவை வைத்து செய்யும் உப்புமாவை பொதுவாக மக்கள் விரும்புவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அதுவே ரவாவை கொஞ்சம் வித்தியாசமாக மற்றும் சுவையாக செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி ரவாவை எப்படி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று நீங்கள் யோசித்தால் அதற்கு இந்த கர்நாடகா ஸ்டைல் காரா பாத்-தான் எளிதான மற்றும் சுவையான வழியாகும். சத்தான காய்கறிகள், இஞ்சி, எலுமிச்சை போன்றவை சேர்ப்பதால் இந்த காரா பாத் சுவை அட்டகாசமாக இருக்கும். கர்நாடகாவின் அனைத்து ஹோட்டல்களிலும் காலையும், மாலையும் இந்த உணவை நீங்கள் சுவைக்க முடியும்.

Khara Bath Recipe How to Make Khara Bath

உங்களுக்கு சுவையான கர்நாடகா ஸ்டைல் காரா பாத்-யை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரா பாத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் ரவை
- 2 டேபிள்ஸ்பூன் நெய்
- ¼ டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 10 முந்திரிப் பருப்பு
- 1 பச்சை மிளகாய்
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- பாதி குடைமிளகாய், பொடியாக நறுக்கியது
- ½ கேரட், பொடியாக நறுக்கியது
- 3 டேபிள்ஸ்பூன் பச்சை பட்டாணி
- 1 சிறிய தக்காளி, பொடியாக நறுக்கியது
- 2 கப் தண்ணீர்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- முக்கால் ஸ்பூன் சாம்பார் பொடி
- அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது
- 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:

- முதலில் ரவையை மிதமான தீயில், அடிக்கடி கிளறிவிட்டு, மொறுமொறுப்பாக மாறும் வரை வறுக்கவும். நிறம் மாறும் அளவிற்கு வறுக்காதீர்கள். ஆறிய பிறகு தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு கடாயில் 1½ டேபிள்ஸ்பூன் நெய்யை சூடாக்கி, அதில் கடுகை சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் முந்திரி சேர்க்கவும்.

- பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்து, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போல மாறும் வரை வதக்கி, கேரட், குடைமிளகாய், பட்டாணி மற்றும் தக்காளியை சேர்க்கவும்.

- 2 நிமிடங்கள் வதக்கி, மூடி வைத்து காய்கறிகள் மென்மையாகும் வரை வேக வைக்கவும், இடையிடையே கிளறி விடவும்.

- பின்னர் சாம்பார் போடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.

- தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அனைத்தையும் நன்றாக கலக்கவும்.

- தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஒரு கையால் ரவையை மெதுவாக ஊற்றிக்கொண்டே, இன்னொரு கையால் தண்ணீரை கிளறி, ரவையை தண்ணீருடன் கலக்கவும்.

- கட்டிகள் வராதபடி நன்றாக கிளறவும். மூடி வைத்து, தண்ணீர் முழுமையாக உறிஞ்சப்படும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

- அடுப்பை அணைத்து, 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் மீதமுள்ள நெய்யைத் தூவவும். நீங்கள் விருப்பப்பட்டால் துருவிய தேங்காயை கூட சேர்க்கலாம்.

- சூடான காரா பாத்தை தேங்காய் சட்னியுடன் பரிமாறுங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion