பப்பாளி காயை வைத்து இந்த பக்குவத்தில் கூட்டு செஞ்சு பாருங்க... டேஸ்ட் சும்மா அட்டகாசமா இருக்கும்...!

Posted By:

Green Pappaya Kootu Recipe in Tamil: பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்து விடுவோம். அதேசமயம் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாகும். சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பொதுவாக பொரியல்தான் சைடிஷாக செய்வார்கள், ஆனால் பொரியல் போலவே சாதத்துக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும் மற்றொரு ஐட்டம் என்றால் அது கூட்டுதான்.

பொதுவாக கூட்டு என்பது பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் புடலங்காயை வைத்துதான் செய்வார்கள், ஆனால் உண்மையில் சில வித்தியாசமான காய்கறிகளை வைத்து கூட்டு செய்யலாம். அப்படி ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான காய்தான் பப்பாளி காய். பழுக்காத பிஞ்சு பப்பாளியை வைத்து செய்யப்படும் இந்த கூட்டு மதிய உணவுக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த பதவில் பப்பாளி காயை வைத்து எப்படி கூட்டு செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Green Pappaya Kootu Recipe How to Prepare Green Pappaya Kootu

தேவையானப் பொருட்கள்:

- அரை பழுக்காத பப்பாளி
- அரை கப் பாசிப்பருப்பு
- 1 ஸ்பூன் மஞ்சள்
- உப்பு தேவையான அளவு

மசாலா அரைக்க:

- அரை கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- அரை ஸ்பூன் அரிசி மாவு
- அரை ஸ்பூன் சீரகம்
- 2 சின்ன வெங்காயம்

தாளிக்க:

- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை:

- பப்பாளியின் தோலை பச்சை நிறம் இல்லாமல் நன்றாக சீவி வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஓரமாக வைத்து விடவும்.

- ஒரு சிறிய பிரஷர் குக்கரில், பாசிப்பருப்பைச் சேர்த்து, அதன் மேல் நறுக்கிய பப்பாளி, உப்பு, மஞ்சள் மற்றும் காய்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.

- விசில் போட்டு மூடி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

- அதே நேரத்தில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் அரிசி மாவை தண்ணீர் சேர்க்காமல் அல்லது குறைவான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

- பின்னர் சீரகம் மற்றும் தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

- வேகவைத்த பப்பாளி கலவை மீது தேங்காய் விழுதை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

- இறுதியாக ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதை கூட்டின் மீது ஊற்றி நன்கு கிளறவும்.

- சூப்பரான பப்பாளி காய் கூட்டு ரெடி. இது சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 9, 2025, 19:08 [IST]
Desktop Bottom Promotion