இட்லி, தோசைக்கு இந்த சட்னியை ஒருவாட்டி செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்ய சொல்லி கேப்பாங்க..

Posted By:

Green Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? இதனால் தினமும் காலையில் உங்களுக்கு என்ன சட்னியை செய்வதென்ற குழப்பம் இருக்குமா? அதோடு ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சட்னியை செய்ய நினைப்பீர்களா?

அப்படியானால் ஒருமுறை கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யக்கூடிய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியின் ப்ளேவருக்கே வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த சட்னியை ட்ரை செய்யலாம்.

Green Chutney How to Make a Green Chutney For Idli Dosa

உங்களுக்கு க்ரீன் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 4 சிறிய துண்டு
* நாட்டு தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 15 இலைகள்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான மற்றும் சத்தான க்ரீன் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, July 7, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion