ஒருவாட்டி முட்டை கிரேவியை இந்த பக்குவத்துல செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்..

Posted By:

Egg Masala Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? அப்படி செய்தாலும் எப்போதும் ஒரே சுவையில் முட்டையை சமைப்பீர்களா? அதுவும் சாதம், சப்பாத்தி போன்றவற்றிற்கு முட்டையை சைடு டிஷ்ஷாக செய்யும் போது, ஒரே மாதிரி எப்போதும் கிரேவி செய்து போரடித்துவிட்டதா?

சற்று வித்தியாசமான ருசியில் முட்டை கிரேவியை ருசிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருமுறை மசாலா அரைத்து முட்டை கிரேவி செய்து பாருங்கள். இந்த முட்டை மசாலா கிரேவி சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Egg Gravy How To Make a Simple And Easy Egg Masala Gravy

உங்களுக்கு முட்டை மசாலா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* இஞ்சி - 5 துண்டு
* பூண்டு - 8 பல்
* புதினா - 10 இலைகள்
* கொத்தமல்லி - சிறிது
* சின்ன வெங்காயம் - 8
* பச்சை மிளகாய் - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* தண்ணீர் - சிறிது

கிரேவிக்கு..

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த முட்டை - 7
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி மென்மையானதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து, குறைவான தீயில் வைத்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து இரண்டு துண்டுகளாக்கப்பட்ட முட்டைகளை சேர்த்து, மிளகுத் தூளை தூவி கிளறி, குறைவான தீயில் வைத்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முட்டை மசாலா கிரேவி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion