நாவூறும்.. சிக்கன் ரா ரா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Chicken Ra Ra Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்துள்ளீர்களா? எப்போதும் சிக்கனை வாங்கினால் சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் வறுவல் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சிக்கன் ரா ரா ரெசிபியை செய்து பாருங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வழக்கமாக செய்யும் சிக்கன் வறுவல் போரடித்தால், இந்த சிக்கன் ரா ராவை செய்யுங்கள். நிச்சயம் இது உங்களின் நாவிற்கு நல்ல விருந்தளிக்கும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் ரா ரா பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

Chicken Ra Ra How To Make Chicken Ra Ra Recipe

உங்களுக்கு சிக்கன் ரா ராவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ரா ரா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* வரமிளகாய் - 3

ஊற வைப்பதற்கு...

* சிக்கன் - 1/2 கிலோ
* அரைத்த மசாலா - 1 ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சிறிது

ஊற வைப்பதற்கு...

* சிக்கன் கொத்துக்கறி - 1/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா - 1 ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் 1/2 கிலோ சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, அத்துடன் 1 ஸ்பூன் அரைத்த மசாலா பொடி, தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி, மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்பு சிக்கன் கொத்துக்கறியை நீரில் ஒருமுறை கழுவி, அத்துடன் சிறிது உப்பு மற்றும் அரைத்த மசாலா பொடியை 1 ஸ்பூன் சேர்த்து பிரட்டி, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை சேர்த்து உருகியதும், கசூரி மெத்தி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மீதமுள்ள அரைத்த மசாலா பொடி, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் மற்றும் சிக்கன் கொத்துக்கறியை சேர்த்து, பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மீண்டும் மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் ரா ரா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, March 29, 2026, 13:07 [IST]
Desktop Bottom Promotion