For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி?

By Maha
|

How to Stop Breastfeeding a Toddler?
பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே குழந்தையின் தாய், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுத்திருப்பர். அவ்வாறு செய்ய முயன்றதில் பல முறை தோல்வியும் அடைந்திருப்பர். பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சொல்லப்போனால் வெளியே எங்காவது செல்லும் போது, பிறர் முன் தாய்ப்பால் கேட்டு மானத்தை வாங்கிவிடுவர். அதனால் குறுநடை போடும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது மிக முக்கியம். கடினமான செயல் எனினும், சில முயற்சிகள் கொண்டு கீழே உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குறுநடை போடும் குழந்தைகளை தாய்ப்பாலில் இருந்து நிறுத்திவிடலாம்.

* முதலில் தாய்ப்பால் நிறுத்த நினைக்கும் போது தாயானவள், தன்னையே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால், தாய்ப்பாலை இயற்கையாகவே நிறுத்தப்படலாம். இது தாயின் உடல்வாக்கை பொறுத்து அமையும். எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம் இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். இல்லையெனில், முட்டைகோஸ் இலையை மார்பக பகுதிகளில் சில மணி நேரங்கள் வைத்து கொள்வதன் மூலமும் பால் குறைய வாய்ப்புள்ளது.

திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் தாயின் உடல் சிறிது பாதிக்கப்படலாம். சில நேரங்களில் பால் கொடுக்காமல், தாயின் மார்பக பகுதியில் வலி ஏற்படும். அது மட்டுமின்றி குழந்தையின் மனநிலையும் பாதிக்கும். ஏனெனில் திடீரென நிறுத்தவதால், அவர்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருப்பதால், அவர்களது மனநிலை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் தாய்ப்பால் நிறுத்தும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

* திட்டமிட்டு, மெதுவான முறையில் குழந்தையை தாய்ப்பாலில் இருந்து விடுவிக்க வேண்டும். படிப்படியாக மெதுவான முறையில் தாய்ப்பாலை விடுவித்தலால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாயானது அடைபட்டு, வீக்கம் அடைவது அல்லது மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே குழந்தைகளுக்கு முன்பு அடிக்கடி கொடுப்பதை நிறுத்திவிட்டு, மதிய வேளையில் இருமுறை கொடுத்தால், அந்த நேரம் ஒரு முறை வேறு ஏதாவது உணவு கொடுத்தும், மறுமுறை தாய்ப்பால் கொடுத்தும் வர வேண்டும். இதை செய்யும் போது, போக போக தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, உணவுகளைக் கொடுத்து மறக்க வைக்கலாம்.

* குழந்தையை உங்கள் மார்பகங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் முன்னிலையில் உடை மாற்றுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. குழந்தையுடன் சேர்ந்து குளியல் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகம் பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

மேலும் குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும் போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். இதனால் அவர்களை தாய்ப்பாலில் இருந்து மறக்கடிக்கலாம்.

* உங்கள் குழந்தைகளை திசை திருப்புவதால் அவர்களை எளிதில் தாய்ப்பால் மறக்க செய்யலாம். அதிலும் வெளியெ அழைத்துச் செல்வது, அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க வைப்பது, அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்யத் தூண்டுவது போன்ற செயல்களால், குழந்தைகள் அந்த செயல்களைச் செய்வதில் ஆர்வத்தை செலுத்தி, தாய்ப்பாலை மறந்துவிடுவர். மேலும் இரவில் படுக்கும் போது, அவர்களை வெளியே வாக்கிங் அழைத்து செல்வது, கதை சொல்லி அதில் அவர்களின் ஆர்வத்தை தூண்டுவது என்றெல்லாம் செய்து மறக்க வைக்கலாம்.

* பால் கொடுக்கும் போது அவர்களுக்கு அழகான பாட்டிலில் கொடுக்கலாம். அதிலும் அந்த பாட்டிலை தாயானவள் குழந்தைக்கு கொடுக்கும் போது அதனை வர்ணித்தோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்துவிடுவோம் என்று பயமுறுத்தியோ கொடுக்கலாம். ஏனெனில் பொதுவாக சில குழந்தைகள், அவர்களுக்குரிய பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்கமாட்டார்கள். மேலும் சில குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருந்தால், தான் பால் குடிப்பார்கள், அப்போது தாயானவள் குழந்தையை மடியில் போட்டு அரவணைத்து, பாட்டிலின் மூலம் பாலைக் கொடுக்கலாம்.

எனவே மேற்கூறிய எளிய முறைகள் சிலவற்றை செய்து பார்த்து, குழந்தைகள் தாய்ப்பாலை வேண்டுமென்று நினைப்பதை மறக்கச் செய்யுங்கள். வேறு ஏதாவது முறைகள் உங்களுக்கு தெரிந்தால், உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

How to Stop Breastfeeding a Toddler? | குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி?

Generally, by the time a baby becomes a toddler, his mom has already thought about weaning her baby several times. Perhaps she has even unsuccessfully attempted to do so more than once. However, you can wean your toddler by following some simple steps, with some effort and perseverance.
Desktop Bottom Promotion