நான் 'இப்படித்தான்' எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டேன்!! ஒரு பெண்ணின் வாழ்க்கை அனுபவம்!!

Posted By:
Subscribe to Boldsky

அம்மா என்ற கதாப்பாத்திரத்தை இந்த சமூகம் எப்படியெல்லாம் சுரண்டியெடுக்கிறது அதைவிட அந்த அம்மாவால் அவர்கள் வீட்டு குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தும் வேறுபடுகள் பற்றித்தெரியுமா? சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு எல்லாம் ஈடு கொடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் நமக்கு அதற்கான காரணமே நாம் தான் என்று தெரியாதது தான் பெருஞ்சோகம். 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்க்கையின் முதல் மூளைச்சளவை :

வாழ்க்கையின் முதல் மூளைச்சளவை :

பாட்டி.... அம்மா எப்போ வருவா?

நாளைக்கு...

இதத்தான நேத்தும் சொன்ன.

அம்மா சீக்கிரம் வந்துருவா பப்பூமா. இப்டி அழுக்கூடாது பாட்டிக்கு நிறைய வேல இருக்குல்ல என்று சொல்லிக் கொண்டே என்னைத் தூக்கிக் கொண்டாள். அச்சோ என்ன இது சின்னபுள்ள மாதிரி அழுதுட்டு இப்போ நீ பிக் கேர்ள் ஆகிட்ட நீ அக்கா தெரியுமா? அக்கா போய் அழுவாங்களா?

பாட்டி என்னைத் இடுப்பில் தூக்கி வைத்து ‘யூ ஆர் எ பிக் கேர்ள்' என்று சொல்லிக் கொடுக்கும் போது எனக்கு வயது இரண்டு.

இல்ல நான் ஸ்மால்....

நாளைக்கு அம்மா கூட உன் தம்பி பாப்பாவும் வருவான். நீ இப்போ ஸ்மால் பேபி இல்ல அக்கா தெரியுமா?.... அக்கானா பிக் கேர்ள் தான. நீ தான் உன் தம்பி பாப்பாவ பாத்துக்கணும். சரி, பப்பூ குட்டி பொறுப்பா பாத்துப்பான்னு தான சாமி உனக்கு தம்பி பாப்பா குடுத்திருக்கு இப்டி அழுதுட்டே இருந்தா உன் தம்பி பாப்பாவ யாராவது தூக்கிட்டு போய்டுவாங்க.

என் வாழ்க்கையின் முதல் மூளைச்சளவை அது.

Image courtesy

அம்மாவின் அசிஸ்டண்ட் :

அம்மாவின் அசிஸ்டண்ட் :

மறுநாள் அம்மா வந்தாள் கையில் இன்னொரு பாப்பாவுடன். முதலில் கோபமும், வெறுப்பும், ஏக்கமும், தவிப்புமாய் சேர்ந்து அழுது அடம்பிடித்துக் கொண்டேயிருந்தேன் அவ்வப்போது தம்பி பாப்பாவை அடிப்பது,கிள்ளுவதெல்லாம் கூட உண்டு.

தம்பி சிரிக்கப் பழகினான்.

நான் அழுகையை மறைக்கப் பழகினேன்.

‘தம்பி பொம்மைய குடு'

‘தம்பி சட்டைய எடுத்துட்டு வா'

‘தம்பிக்கும் சேத்து லஞ்ச் பேக் எடுத்து வை'

‘தம்பிக்கு சாக்ஸ் மாட்டிவிடு'

இப்படி அம்மா என்னை தன்னுடைய அசிஸ்டண்ட்டாகவே மாற்றிக் கொண்டிருந்தாள்.

Image Courtesy

நண்பர்கள் வேறு உறவுகள் வேறு :

நண்பர்கள் வேறு உறவுகள் வேறு :

அன்று நாங்கள் டூர் எஸ்கர்ஸனுக்காக வீட்டில் அடம்பிடித்துக் கொண்டிருந்தோம்.நான் ஐந்தாம் வகுப்பு தம்பி மூன்றாம் வகுப்பு. அழுதேன், கோபித்துக் கொண்டு இரண்டு நாட்கள் பாட்டி வீட்டில் இருந்தேன்.

பள்ளிக்கு செல்லவே மாட்டேன் என்று அடம்பிடித்தேன் ஒரு வழியாய் டூர் போலாம் என்று சிக்னல் காட்டிய அப்பா தம்பி போட்டும் என்று சிறப்பானதொரு தீர்ப்பை உதிர்த்தார்.

வாழ்க்கையின் முதல் ஏமாற்றம். தாங்காமல் அம்மாவிடம் அழுது அடம்பிடித்தேன்.என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டு பின்னாலிருந்து இருக்க கட்டிக் கொண்டாள்.

பாப்பா.... ஏன் நீ இன்னும் சின்ன புள்ள மாதிரி அடம் புடிக்கிற நான் தான் டூர் போகணும்னு அழுதேன். என்னைய அனுப்பாம தம்பிய மட்டும் அனுப்புறீங்க?

தம்பி பையன் டீ..... நீ பொண்ணு

பொண்ணுனா?....

தர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிற பையன டூர் அனுப்புவீங்க? ஃபிவ்த் படிக்கிற பொண்ண டூர் அனுப்ப மாட்டீங்களா அம்மா நாங்க எல்லாரும் ஒண்ணாதாம்மா போவோம். ஒரே பஸ் தான்.

ம்ஹூம்.... கடைசி வரை என்னை டூருக்கு அனுப்பவே இல்லை.

என்னை சமாதானப்படுத்துவதாய் நினைத்து கோவையில் உள்ள பெரிய சித்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் பாவம் அவர்களுக்கு தெரியவில்லை நண்பர்கள் வேறு உறவுகள் வேறு என்று.

Image Courtesy

சின்ன சின்ன கசப்புகள் :

சின்ன சின்ன கசப்புகள் :

அன்று பள்ளி ஆண்டு விழா நண்பர்களோடு இருந்த குஷியில் நேரம் போனதே தெரியவில்லை வீடு வந்து சேர்கையில் மணி எட்டு. அம்மா ராட்சசியாக மாறியிருந்தாள்.

அப்பா அரக்கனாக மாறிக்கொண்டிருந்தார். ஒரு பொம்பளப்புள்ள இவ்ளோ நேரம் என்ன வேல ஸ்கூல்ல?லேட் ஆகும்னா சொல்லத்தெரியாதா? என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து சாக வேண்டியதா இருக்கு என்று இருவரும் கச்சேரி நடத்தியதில் அன்று மேடையேறி பரிசு வாங்கியதை மறந்து அழுது கொண்டிருந்தேன். இப்படி என் வாழ்க்கையில் பல அனுபவங்கள் உண்டு.

தம்பிக்கு தட்டில் சோறு வைத்து அவன் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து... தம்பி வந்தால் எதோ கடவுளே நேரில் வருவது போல தம்பி வர்ற நேரம் ஆயிடுச்சு சீக்கிரம் சோஃபா க்ளீன் பண்ணு என்ற பரபரப்பாக என்னை வேலை வாங்குவள்.

Image Courtesy

ஆணுக்கு மட்டும் காசு :

ஆணுக்கு மட்டும் காசு :

நண்பர்களுடன் வெளியில் செல்ல வேண்டும் என்றோ அல்லது அலுவல் வேலையாக செல்ல வேண்டும் என்றோலோ போவதற்கும் வருவதற்கும் சொட்டாக காசைத் திணிப்பாள் என்னிடம். தம்பிக்கு மட்டும் அருவியாய் கொட்டும். முன்னுரிமைகள் இருக்கலாம். இது அதற்க்கும் மேலே அல்லவா இருக்கிறது. வெளியில் செல்லும் பெண்களுக்கு அவசரத்தேவை வராதா என்ன?

ஆம்பளப்பய வலுவா இருக்கணும் என்று சொல்லி காலையில் ஒரு முட்டையும், மதியம் சாப்பாட்டிற்கு சோற்றில் ஒளித்து வைத்துக் கொடுக்கும் அம்மாக்களுக்கு தங்களுக்காக ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று என்றுமே தோன்றுவதில்லை.

Image Courtesy

அம்மா சொல்லிக் கொடுத்தது :

அம்மா சொல்லிக் கொடுத்தது :

‘அம்மா சீக்கிரம் காலேஜ் லேட் ஆச்சு உன்ன வேற பேங்க்ல விட்டுட்டு போகணும்..

இரு டீ உருளக்கிழங்க மட்டும் தாளிச்சிடறேன்,அவனுக்கு ரொம்ப புடிக்கும்.'

இப்பிடி பால் டப்பாவில் ஆரம்பித்து உருளைக்கிழங்கு வரையில் என் வாழ்க்கையில் என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்து ஒரு ஆணைச் சார்ந்து தான் நான் இருக்க வேண்டும் என்பது தான். ஆண் என்பவன் ஒரு தீர்க்கதரிசி, ஆணுக்குத் தான் முன்னுரிமை, ஆணுக்குப் போகத்தான் நமக்கு என்று என் மனதில் விதைக்கப்பட்டது நான் வாழ்ந்த இந்த வாழ்க்கை முறை.

Image Courtesy

தம்பியின் மனதில் :

தம்பியின் மனதில் :

அம்மா, என்னைப் போலவே தம்பியின் மனதிலும் தான் ஒரு ஆண். எப்போதும் பெண் என்பவள் தனக்கு கீழே தான். தன்னுடைய வேலைகளை, ஏவல்களை ஏற்று நடப்பவள் தான் பெண். என்று ஆழமாக விதைத்துவிட்டாள் அதற்கு சான்றாய்த் தான் நானும் அம்மாவும் இருக்கிறோமே...

அம்மா என்றொரு அடிமை :

அம்மா என்றொரு அடிமை :

அன்று அப்பாவுக்கு காய்ச்சல்..... சுடு தண்ணி வைக்கவா?உங்களுக்கு மட்டும் தனியா கஞ்சி வச்சு குடுக்கவா? மாத்திர பிச்சுத் தரவா?

கால் அமுக்கி விடவா? என்று கேட்டு விழுந்து விழுந்து கவனித்தாள் அம்மா.

அப்பா வேண்டாமென்று தடுத்தும் பல வேலைகளை தானே இழுத்துப் போட்டு செய்தாள். காலை ஆறு மணிக்கு ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவிற்கு காபி கொடுக்கும் அம்மா இரவில் தூங்குவதற்கு மணி பதினொன்றாக வேண்டும்.

Image Courtesy

அடிமையின் கடமை :

அடிமையின் கடமை :

"அம்மா" என்பவள் அன்பின் அடிமை. ஆம் ஒரு அடிமையைப் போல, தான் அடிமையென்று தெரியாமல் இதெல்லாம் தன்னுடைய கடமை என்று நினைத்து தன் கடைசி காலம் வரை பணியாற்றும் சம்பளமில்லாத வேலைக்காரி அவள்.

என் அம்மாவைப் பார்த்தால் பந்தம் என்னும் பெயரிலும் பாசம் என்னும் பெயரிலும் கட்டுப்பட்டு இப்பிடி அறியாமையில் கிடக்கிறாளே என்று பாவமாய் இருக்கிறது.

Image Courtesy

விடை தெரியாத கேள்விகள் :

விடை தெரியாத கேள்விகள் :

அன்பு என்று சொல்லுக்கும் உணர்விற்கும் இத்தனை சக்தி உண்டா? தானாக ஒரு பிணைப்பை உண்டாக்கி அவற்றிற்காக தன்னுடைய உடல் பொருள் ஆவி என்று எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் எப்படி அவளால் இருக்க முடிகிறது அவளுக்கென்ற ஒரு நாள்? அவளுக்கென்று ஒரு விருப்பம் அவளுக்கென்று ஒரு கனவு இதெல்லாம் இருக்காதா? அல்லது இருக்க கூடாது என்று பாசக்காரர்கள் கட்டைளையிட்டிருக்கிறார்களா?

தெரியவில்லை என்னுடைய விடை தெரியா கேள்விகள் இவை.

அனுபவம் தந்த பாடம் :

அனுபவம் தந்த பாடம் :

இவற்றுக்கெல்லாம் பதில் என்னுடைய இருபத்தி ஆறாவது வயதில் எனக்கொரு மகள் பிறந்த போது கிடைத்தது. அடுத்த இரண்டாவது வருடத்தில் அழகான ஆண் குழந்தைக்கு தாயானேன்.

இரண்டு வயதிலிருந்து நான் சந்தித்த அனுபவங்கள் விடை தெரியாமல் பல ஆண்டுகள் முழித்த கேள்விகள் என்னை இருவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று உறுதியெடுக்க வைத்தது.

உனக்கு துணையாய் இன்னொருவன் வருவான் என்று என் மகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. ‘உனக்கு நீ தான் துணை என்று சொல்லிக் கொடுக்கிறேன்'.

இது ஆணுக்கானது இது பெண்ணுக்கானது என்று எதையும் பிரித்து ஒதுக்குவது இல்லை. "முயற்சி செய்" என்பதை மட்டும் உறுதியாக திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கிறேன்.

குழந்தைமை :

குழந்தைமை :

அவன் தம்பி..... நீ பிக் கேர்ள், பொறுப்பா நடந்துக்கோ என்று என் மகளின் குழந்தை தனத்தை நசுக்கவில்லை.

எனக்கு அவளும் குழந்தை அவனும் குழந்தை.

ரோட்டில் சைக்கிள் ஓட்டுவேன் என்று அடம் பிடிக்கும் மகளும், அம்மா இன்னக்கி நான் கலரிங் பண்ணது நல்லாயிருக்கா என்று தான் கிறுக்கலை காட்டிக் கொண்டிருக்கும் மகனும் மாற்றத்திற்கான துவக்கமாய் இருப்பார்கள்...

ம்ம்.... முக்கியமான விஷயமொன்றை மறந்துவிட்டேனே இந்த வருடம் என் மகளும் மகனும் தங்களுடைய பள்ளி சுற்றுலாவாக சைலண்ட் வேலி செல்லயிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what is gender discrimination?where it begins from?

A lady wrote a story about gender discrimination.
Story first published: Tuesday, July 25, 2017, 16:04 [IST]