For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தவளையின் வெற்றி ரகசியம்!!!

By Maha
|

Frog
ஜென் துறவி ஒருவர் எப்போதும் தனது சீடர்களுக்கு மாலை வேளையில் புத்தியை புகட்டும் சிறுகதைகளை சொல்வதை வழக்கமாக கொண்டார். அன்றும் அதேப்போல் தனது சீடர்களை அழைத்து கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது அவர் சீடர்களிடம், "இதுவரை நான் உங்களிடம் கதையைக் கூறி, அதற்கான சிந்தனையையும் சொல்வேன். ஆனால் இப்போது நீங்கள் நான் சொல்லும் கதையை புரிந்து கொண்டு, கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார். அதற்கு சீடர்களும் "சரி, குருவே!" என்று கூறி, அந்த கதையை மிகவும் கூர்மையாக கேட்க ஆரம்பித்தனர்.

பின் குரு கதையை சொல்ல ஆரம்பித்தார். "ஒரு ஊரில் தவளை போட்டி நடந்தது. அந்த போட்டியில் நிறைய தவளைகள் பங்கு கொண்டன. அது என்ன போட்டியென்றால், உயரமான குன்றின் உச்சிக்கு யார் முதலில் செல்வது என்பது தான். அந்த உச்சியின் உயரத்தைப் பார்த்து, அங்கு கூடியிருந்தவர்கள, எந்த தவளையும் இந்த உச்சியை அடைய முடியாது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஆனால் அதில் ஒரு தவளை மட்டும் அவர்கள் பேசுவதை கூர்மையாக பார்த்தது. பின் போட்டி தொடங்கியதும், அனைத்து தவளைகளும் அடித்து பிடித்து, ஒன்றன் மேல் ஒன்றாக ஏறி, வழுக்கி விழுந்தன. ஆனால் ஒருசில தவளைகள் சற்று நிதானமாக ஓரளவு உயரத்தை அடைந்து, முடியாமல் கீழே வந்துவிட்டன. ஒரு தவளை மட்டும் உயரத்தை பொருட்படுத்தாமல் ஏறி உச்சியை அடைந்தது. அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். பின் பரிசை கொடுப்பதற்காக அந்த வெற்றி பெற்ற தவளையைப் பார்த்து, உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டால், அந்த தவளை எதுவுமே பேசாமல் இருந்தது. ஏன்?" என்று குரு கேட்டார்.

அனைத்து சீடர்களும் அவர்களுக்குள் ஒரே குழப்பத்தில் இருந்தனர். பின்னர் அவர்கள் "தெரியவில்லையே" என்று குருவிடம் கூறினர். அதற்கு குரு "வேறு எதுவும் இல்லை, அந்த தவளைக்கு காது மற்றும் வாய் பேச வராது, அதனால் தான் அது எதுவும் பேசவில்லை" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், "அந்த தவளை வெற்றி என்னும் நோக்கத்தை மட்டும் மனதில் வைத்து போட்டியில் பங்கு கொண்டதால் தான், அதனால் வெற்றி பெற முடிந்தது" என்பதையும் கூறி சென்று விட்டார்.

English summary

frog's secret of success | தவளையின் வெற்றி ரகசியம்!!!

This story tells us that if we participate in one competition, we should think victory in our mind. then only we can achieve our goals.
Story first published: Tuesday, September 11, 2012, 15:15 [IST]
Desktop Bottom Promotion