Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
உயிரைப் பறிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று: எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
கொரோனா அறிகுறிகளை மட்டுமின்றி, கரும்பூஞ்சை தொற்றின் அறிகுறிகளையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் கரும்பூஞ்சையாலும் மக்கள் இறந்து வருகிறார்கள்.
கொரோனா பெருந்தொற்றினால் ஒருபக்கம் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் போது, மறுபுறம் கருப்பு பூஞ்சையாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை கருப்பு பூஞ்சை பாதிப்பால் சுமார் 8,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகளை மட்டுமின்றி, கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகளையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் கருப்பு பூஞ்சையாலும் மக்கள் இறந்து வருகிறார்கள். எனவே தமிழ் போல்ட் ஸ்கை கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள், அது எதனால் ஏற்படுகிறது, யாருக்கெல்லாம் இந்த தொற்று ஏற்படும், தடுப்பது எப்படி மற்றும் தடுப்பு வழிகள் போன்ற பல கேள்விகளுக்கான விடையை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
மியூகோர்மைகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சை/கரும்பூஞ்சை ஒரு அரிய வகை தொற்று. இந்த பூஞ்சை பொதுவாக அழுகிய பழங்கள், காய்கறிகள், தாவரங்கள், ஈரமான இடங்களில் இருக்கும். இந்த பூஞ்சை தொற்று புதியது அல்ல. பல காலமாக இந்த தொற்று உள்ளது. இது மற்ற வைரஸ் பாக்டீரியாக்களைப் போன்றே காற்றினால் மூக்கின் வழியே உடலினுள் புகுந்து தொற்றுக்களை உண்டாக்குகின்றன. இந்த பூஞ்சை தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், அது கண்களை கடுமையாக தாக்கி, பின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடையே கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது ஏன்?
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடையே கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது. மேலும் இந்த பூஞ்சை தொற்றானது ஐ.சி.யு-வில் ஆக்சிஜன் தெரபிக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பயன்படுத்தும் ஈரப்பதமூட்டிகளால் அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பூஞ்சை தொற்றுக்கு காரணம் ஆக்சிஜன் சிலிண்டர்களின் மீட்டர்களில் பயன்படுத்தப்படும் சாதாரண குழாய் நீர் தான். அதோடு கொரோனா சிகிச்சையின் போது கொடுக்கப்படும் ஸ்டெராய்டுகளும் ஓர் முக்கிய காரணம்.

யாரையெல்லாம் எளிதில் தாக்கும்?
கருப்பு பூஞ்சை தொற்று பின் குறிப்பிட்டுள்ளவர்களை எளிதில் தாக்கும்.
* இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருக்கும் சர்க்கரை நோயாளிகள்
* கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு ஸ்டெராய்டு எடுத்தவர்கள்
* நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்
* ஐ.சி.யு-வில் நீண்ட காலம் இருந்தவர்கள்
* இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து உடையவர்கள்
* குறைவான வெள்ளையணுக்களைக் கொண்டிருப்பவர்கள்

கருப்பு பூஞ்சை/கரும்பூஞ்சையின் அறிகுறிகள்
கருப்பு பூஞ்சையின் பொதுவான முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
* மூக்கு மற்றும் நாக்கில் நிறமாற்றம்
* மங்கலான பார்வை
* சுவாசிப்பதில் சிரமம்
* நெஞ்சு வலி
* இரத்தம் கலந்த சளி
* கண்கள் சிவத்தல் மற்றும் வீங்குதல்
* காய்ச்சல்
* இருமல்
* தலைவலி
* வாய்க்குள் கருப்பு நிற புண்
* வாந்தி

கருப்பு பூஞ்சைக்கான சிகிச்சைகள்
கருப்பு பூஞ்சை தொற்றுள்ளவர்கள் ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். இந்த கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முக்கிய மருந்தாக இருப்பது ஆம்ஃபோடெரிசின் பி ஊசி ஆகும். இந்த ஊசி ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்தாகும். இந்த தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள், கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஈ.என்.டி நிபுணர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த நோய்த்தொற்று உடலின் வெவ்வேறு பகுதிகளை ஒரே நேரத்தில் பாதிக்கிறது.
உயிர்காக்கும் செயல்முறைகளின் ஒரு பகுதியாக, பூஞ்சையால் பாதிக்கப்பட்ட அனைத்து திசுக்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும். எனவே சிலர் கண் பார்வையை இழக்க நேரிடும். சில சமயங்களில் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 4-6 வாரங்கள் வரை நரம்பு வழி பூஞ்சை எதிர்ப்பு செயல்முறை தேவைப்படலாம்.

செய்ய வேண்டியவை
* இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
* கொரோனாவில் இருந்து குணமான பின்பு இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும்.
* ஆக்ஸிஜன் சிகிச்சையின் போது ஈரப்பதமூட்டியில் சுத்தமான நீரைப் பயன்படுத்தவும்.
* மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் போது மட்டுமே ஸ்டெராய்டுகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

செய்யக்கூடாதவை
* கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளை கவனிக்க தவறாதீர்கள்.
* மூக்கடைப்பு ஏற்பட்டால், அது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக கொரோனாவில் இருந்து மீண்ட பின் மூக்கடைப்பு பிரச்சனையை சந்தித்தால், அப்போது அதை புறக்கணிக்கக்கூடாது.
* சிறு பிரச்சனையாக இருந்தாலும், மருத்துவரை அணுகுவதற்கு தயக்கம் கொள்ளக்கூடாது.

எவ்வளவு ஆபத்தானது?
மியூகோமிகோசிஸ் வழக்குகளில் இறப்பு விகிதம் மிகவும் அதிகம். அதிலும் இந்த தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இறப்பு விகிதம் 80 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. அதுவே சிகிச்சை அளிக்கப்பட்டால், அப்போது அதன் இறப்பு விகிதம் 40-50 சதவீதமாகும். ஒருவேளை சைனஸ் கட்டத்தில் இந்நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், நோயாளி எளிதில் குணமடைவார்.



Click it and Unblock the Notifications