For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பின் வலிமை

தமிழகத்தின் சூரியன் மறைந்துவிட்டது. கலைஞர் அவர்களுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் இடையே அற்புதமான நட்பு ஒன்று இருந்தது. ஆனால் அரசியல் விளையாட்டு அவர்களை எதிரிகளாக சித்தரித்துவிட்டது.

|

தமிழகத்தின் சூரியன் மறைந்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் நேற்று மாலை இரண்டு சூரியன் மறைந்தது. தமிழக இல்லை இந்திய அரசியலின் பிதாமகர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி இறந்துவிட்டார். இன்னும் பலரால் நம்ப முடியாத கசப்பான உண்மை. தன் வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்ககைக்கு அர்ப்பணித்து எண்ணற்ற சாதனைகள் செய்த இமயம் இப்போது சரிந்துவிட்டது. அவரின் பிரிவால் வாடும் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Politics

கால் நூற்றாண்டுக்கு முன் தமிழக அரசியல் சரித்திரத்தில் நிகழ்ந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மிக மோசமானவை. ஒன்று பெருந்தலைவர் காமராஜரின் மரணம் மற்றொன்று கருணாநிதி - எம்ஜிஆர் அவர்களுடைய பிரிவு. காலம் அவர்களை பிரித்தாலும் அவர்களுக்குள் இருந்த நட்பையும், நேசத்தையும் இறுதிவரை எவராலும் அசைக்க முடியவில்லை. இந்த தலைமுறையினருக்கு கருணாநிதி - எம்ஜிஆர் என்றால் எதிரிகள் என்றுதான் படிப்பிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த நட்பு கலைஞரின் சொல்வன்மை போல மிக வலிமையானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரைவாழ்க்கை

திரைவாழ்க்கை

கலைஞர் அவர்களும் எம்ஜிஆர் அவர்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் தங்கள் திரைவாழ்க்கையை தொடங்கினர். இருவரும் 1946 ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படத்தின் அரங்கில் சந்தித்தனர். அப்போது அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவர்கள் எதிர்காலத்தில் தமிழகத்தின் இருபெரும் ஆளுமையாக உருவெடுக்கப்போகிறோம் என்று. அப்போது தொடங்கிய அவர்களின் நட்பு மலைபோல உயர்ந்துகொண்டே சென்றது. ஒருகட்டத்தில் இருவரும் 12 ரூபாய் வாடைகைவீட்டில் ஒன்றாக தங்கினர். சொல்லிவைத்தாற் போல் இருவரும் தங்கள் துறைகளில் உச்சத்தை அடைந்தனர். எம்ஜிஆரை காண ஒரு கூட்டம் என்றால் கலைஞர் அவர்களின் புரட்சி வசனங்களை கேட்க ஒரு கூட்டம் என இருவருமே புகழின் எல்லைக்கு சென்றனர்.

கொள்கை வேறுபாடு

கொள்கை வேறுபாடு

கலைஞர் அவர்கள் ஆரம்பம் முதலே அண்ணா அவர்களிடம் அரசியல் பயின்றவர். எம்ஜிஆர் அவர்களோ மகாத்மா காந்தி மீது அதிக பற்றுக்கொண்டவர். கலைஞர் அவர்கள் எம்ஜிஆருக்கு அண்ணாவின் அரசியலை போதித்தபோது எம்ஜிஆர் கலைஞருக்கு மகாத்மாவின் கொள்கைகளை எடுத்துக்கூறினார். இருவரும் அடிக்கடி சுவாரசியமான வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இதைப்பற்றி பின்னாளில் கலைஞர் கூறியபோது " நான் அவருக்கு அண்ணா அவர்களின் புத்தகத்தை கொடுக்கும்போது, அவர் எனக்கு காந்தி அவர்களின் புத்தகத்தை கொடுப்பார். எங்களின் வாக்குவாதத்தின் முற்றுப்புள்ளியே கழகத்தில் இணைந்தது " என்று கூறினார்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் வாழ்க்கை

கழகத்தில் இணைந்த பிறகு இருவரும் அண்ணாவின் விரல் பிடித்து அரசியல் கற்க தொடங்கினர். இருவருமே அரசியல் கற்றாலும் எம்ஜிஆர் திரைப்பட பணிகளில் மூழ்கிவிட்டார் கலைஞர் அர்ஜுனனாய் அரசியலில் அனைத்தையும் கற்றார். இருவருமே சட்டமன்ற உறுப்பினர்களாய் தங்கள் அரசியல் வாழ்க்கையை தொடங்கினர். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கட்சியை வழிநடத்தும் மாபெரும் பொறுப்பை தன் இளம்வயதிலியே சுமக்க தொடங்கினார் கலைஞர். காலம் என்னதான் இருவரையும் பிரிக்காமல் வைத்திருந்தாலும் கூடவே இருக்கும் குள்ளநரிகள் விடுவார்களா? எம்ஜிஆர் மற்றும் கலைஞருக்கு இடையே விரிசலை ஏற்படுத்த தொடங்கினார்கள்.

கலைஞர் - எம்ஜிஆர் பிரிவு

கலைஞர் - எம்ஜிஆர் பிரிவு

1969 ஆம் ஆண்டு தன்னுடைய 45 வது வயதில் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் கலைஞர் அவர்கள். உடன் இருந்தவர்கள் ஏற்படுத்திய பூசல் சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கலைஞரே எம்ஜிஆர் அவர்களை கட்சியை விட்டு நீக்கும்படி செய்தது. ஆனால் அது கட்சியை சமாதானப்படுத்துவதற்காக எடுத்த முடிவுதானே தவிர அவரின் உள்ளம் எடுத்த முடிவல்ல. பிறகுதான் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது திமுக வின் பரமஎதிரியான அதிமுக. கட்சிகள் அவர்களின் இடங்களைதான் பிரித்ததே தவிர அவர்களுக்குள் இருந்த நட்பை இல்லை.

நட்பின் வலிமை

நட்பின் வலிமை

கருணாநிதியும், எம்ஜிஆரும் பிரிந்திருந்த நேரம் ஒருநாள் எம்ஜிஆர் அவர்கள் காரில் தன் நண்பர்களுடன் பயணத்துக் கொண்டிருந்தார். அப்போது உடனிருந்தவர்கள் தொடந்து கலைஞர் அவர்களை பற்றி அவதூறாய் பேசிக்கொண்டே வர ஒருகட்டத்தில் ஒருவரின் வார்த்தை எம்ஜிஆருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்த கார் உடனே நிறுத்தப்பட்டது. கலைஞரை பற்றி பேசிய அந்த நபர் காரை விட்டு இறக்கி விடப்பட்டார். கார் நிற்காமல் சென்றது. அவ்வாறு இறக்கிவிடப்பட்டவர் வேறுயாருமல்ல எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் ஜேபி பங்கராஜ். இதனை அறிந்த எம்ஜிஆரின் கட்சி நிர்வாகிகள் அதன்பின் அவர் முன் கலைஞரை பற்றிப்பேசவே அஞ்சினர்.

கலைஞரின் கடிதம்

கலைஞரின் கடிதம்

1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் உடல்நிலை மிகமோசமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு கலைஞர் எழுதிய " நானும் பிரார்த்தனை செய்கிறேன்" என்ற கடிதம் தமிழக அரசியலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த கடிதத்தில் இருந்தது யாதெனில்,

" என் அருமை நண்பனே,

கவர்னர் நீ உடல்நலம் பெற பிரார்த்திப்பாதாக கூறுகிறார்

அனைத்து மதத்தினரும் தாங்கள் சார்ந்த நம்பிக்கையின்படி நீ உடல்நலம் பெற்றுவர பிரார்த்திக்கிறார்கள்

உனது கட்சியை சேர்ந்தவர்களும், உன்னை தலைவனாய் ஏற்றவர்களும் நீ முன்புபோல எழுந்து வரவேண்டுமென பல கோவில்களில் பிரதிக்கிறார்கள்

நான் அண்ணாவாலும், பெரியராலும் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையுடனேயே வளர்க்கப்பட்டவன். கடவுள் முன் நின்று கையேந்தி நிற்பது எந்தவித பலனையும் தராது. இதுவே என் நம்பிக்கை

இது எனது நம்பிக்கை என்பதால் மற்றவர்கள் உனக்காக செய்யும் பிரார்த்தனைகளை நான் குறைசொல்ல முடியாது.

அவர்கள் வேண்டுதலால் நீ முன்புபோல எழுந்து வந்தால், நான் அடையும் மகிழ்ச்சியானது உனக்காக பிரார்த்தனை செய்தவர்களின் மகிழ்ச்சியை விட எந்த விதத்திலும் குறையாது

நான் பிரார்த்தனை செய்யப்போவதில்லை. ஏனெனில் நான் வளர்ந்த சூழ்நிலை அப்படிப்பட்டது

ஆனால் என் இனிய நண்பனே! அவர்களின் பிரார்த்தனைகள் உன்னை முன்புபோல உடல்நலத்துடன் கொண்டுவரட்டும்

என் பாசமிகு பழைய நண்பனே! உன் சிரித்த முகத்துடன் எங்களை காண வா

உன்னை சந்திக்க எனக்கு அனுமதி இல்லை

அது முக்கியமல்ல, நீ மீண்டு வந்தாலே போதும் எனக்கு

பிரார்த்தனை என்னும் சொல்லுக்கு "துதி" என்னும் பொருள் மட்டுமில்லை "மேல்முறையீடு" என்னும் பொருளும் உள்ளது

அந்த அர்த்தத்தில் தேவைப்பட்டால் நானும் உனக்காக பிரார்த்திப்பேன். உன்னுடன் காரசாரமான விவாதங்களை செய்ய விரைவில் நீ குணமடைய வேண்டும். சூரிய ஒளிக்கதிர் முன் கரையும் பனி போல உன் நோய்கள் நீங்கிவிடும்.

என்றும் உன் நண்பன்

மு.க

அரசியலில் எதிரிகளாய் இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த நட்பு மட்டும் என்றுமே குறையவில்லை.

எம்ஜிஆர் இருந்திருந்தால்

எம்ஜிஆர் இருந்திருந்தால்

எம்ஜிஆர் அவர்களின் மறைவின் போது கலைஞர் அவர்கள் அடைந்த துயரம் அவருக்கு மட்டுமே தெரியும். அவர் மறைந்ததால்தான் என்னவோ இன்று கலைஞருடைய மரணத்தை சுற்றியும் கூட அரசியல் நடக்கிறது. ஒருவேளை எம்ஜிஆர் இப்போது இருந்திருந்தால் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் சென்று கலைஞரை பார்த்திருப்பார், நண்பனாக அல்ல அவரது அண்ணனாக. கலைஞர் அவர்களை காப்பாற்ற என்னவெல்லாம் செய்திருக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் முயன்றிருப்பார். அனைத்து வழிகளும் தோற்று அவர் மறைந்த செய்தி கேட்டு அவர் குடும்பத்தினர் கண்ணீர் விடும்முன் பூமியில் விழுந்த மமுதல் கண்ணீர் அவருடையதாகத்தான் இருந்திருக்கும். இப்போது நடக்கும் வழக்கிற்கே வேலையின்றி கலைஞரை அவரது "அண்ணா"வுடனேயே மெரினாவில் சேர்த்துவிட ஆவணம் செய்திருப்பார். ராஜாஜி அரங்கில் செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள் சாய்ந்து அழ தன் தோள்களை கொடுத்திருப்பார்.

கலைஞர் மரணம்

கலைஞர் மரணம்

வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய நேரமிது கலைஞரும், எம்ஜிஆரும் அரசியல் எதிரிகள் மட்டும்தான் ஆனால் அவர்கள் இருவரும் ஆருயிர் நண்பர்கள் அது இறுதிவரை மாறவில்லை. இப்பொழுது கூட கலைஞரை வரவேற்க எம்ஜிஆர் மேலே காத்திருக்கலாம். அங்கும் அவர்களின் நட்பும், விவாதமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். மரணம் என்பது அவரின் உடலுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. தமிழ் வாழும் வரை அதனுடன் கலைஞரும் வாழ்வார். அவர் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த தமிழும், பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடும் வையம் வாழும் வரை அவர் புகழ் சொல்லும். ஓயாமல் உ(தி)ழைத்த சூரியன் தன் உடன்பிறப்புகளை காண பூமியை விட்டு சென்றது. மறைந்த இந்த ஒற்றை சூரியன் ஆயிரம் சூரியனாய் எழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship
English summary

Unknown bond between Kalaingar and MGR

Kalaingar M. Karunanidhi had died yesterday. He has a soulful bond with MGR. But the political game made them as enemies. But the time they both spent together was their golden period.
Desktop Bottom Promotion