நான் இஞ்சினியர், அவனோ 7-ஆம் வகுப்பு பெயில்! எங்கள் திருமணம் சாத்தியமா? My Story #70

Written By:
Subscribe to Boldsky

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக அவனை எனக்கு தெரியும். நாங்கள் எங்களது சொந்த ஊரான திருநெல்வேலியை விட்டு தொழிலுக்காக சென்னை வந்து செட்டில் ஆன குடும்பம். ஆனால் ஏதாவது விசேஷம் என்றால் அடிக்கடி திருநெல்வேலிக்கு செல்வோம். அப்போது எனது அத்தை மகனுடன் ஒன்றாக சேர்ந்து விளையாடிய நாட்கள் இன்னும் எனது மனதில் அடிக்கடி வந்து போகும்.

என் அத்தைக்கு 6 மகன்கள், மூத்த பையன் தான் என்னை விட மூன்று வயது பெரியவன். அவனுடன் தான் நான் சின்ன வயதில் இருந்து ஓடியாடி விளையாடுவேன்.. அந்த வசந்த கால நினைவுகள் என் மனதை விட்டு என்றைக்குமே அழியாத நினைவுகளாக இருக்கும். அந்த சின்ன வயதிலேயே என் அத்தையின் மூத்த மகன் முத்துவின் நல்ல குணம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மாவின் பிரிவு

அம்மாவின் பிரிவு

காலங்கள் கடந்தன... நான் அப்போது 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது என் அம்மா எதிர்பாராத விதமாக இறந்து விட்டார்கள். எனக்கு என் அம்மா இல்லாத ஒரு வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று ஒரே பயமாக இருந்தது. எனக்கு ஒரு அண்ணும் இருக்கிறார். என் அம்மாவின் உயிரிழப்பிற்கு பிறகு எங்களது வீட்டில் நான் மட்டும் தான் பெண். அப்போது தான் நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காரணத்தினால், வீட்டில் வேலைக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. எனவே ஒரு பெண்னை வேலைக்கு சேர்த்தோம்...

வேலைக்கார பெண்

வேலைக்கார பெண்

அந்த வேலைக்காரப் பெண்ணை நாங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்த்தோம் ஆனால் அவர் அவ்வாறு இல்லை... வீட்டு வேலைகளை தவிர தன்னால் முடிந்த பல போட்டுக் கொடுக்கும் வேலைகளை செய்வார். என் அப்பாவும் அந்த வேலைக்கார பெண்ணின் பேச்சு தான் வேதவாக்கு என்று இருந்தார்.. நானும் என் அண்ணாவும் என்ன சொல்கிறோமோ அதை விட அந்த வேலைக்கார பெண்ணின் பேச்சு தான் எங்களது வீட்டில் எடுபட்டது...

கல்லூரி காலம்

கல்லூரி காலம்

நான் பள்ளிப்பருவத்தை எல்லாம் கடந்து கல்லூரிப்பருவத்திற்கு வந்தேன்...! என்னுடன் படிப்பவர்களுக்கு எல்லாம் அவரவர் அம்மாக்கள் நல்ல ருசியான உணவை சமைத்து கொடுப்பார்கள்... ஆனால் நான் மட்டும் எங்கள் வீட்டு வேலைக்கார பெண்ணின் சுவையில்லாத உணவை தான் கொண்டு செல்வேன். நான் கொண்டு செல்லும் உணவு என் தோழிகள் யாருக்கும் பிடிக்காது. இருந்தாலும் கூட என் மனது கஷ்டப்பட கூடாது என்பதற்காக என் உணவை அவர்கள் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அவர்களது உணவை தருவார்கள்.

உயிர் தோழி

உயிர் தோழி

ஒருநாள் என் உணவு நல்லவே இல்லை என்று சாப்பிட்டு பார்த்து விட்டு என் தோழி ஒருத்தி இதை எல்லாம் எப்படி தான் சாப்பிடறாங்களோ என்று என் மனம் வலிக்கும் படியாக என்னை பார்த்து கூறிவிட்டாள். அன்று எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என் தோழி ஒருத்தி தான் எனக்கு சாதகமாக பேசினாள். என் மற்றொரு தோழியை திட்டினாள். அன்று முதல் தான் நானும் ரீதாவும் உயிர் தோழிகள் ஆனோம்..

அண்ணியின் கோபம்

அண்ணியின் கோபம்

ரீதாவின் வருகைக்கு பின்னர் தான், நான் என் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.. அவள் என்னுடைய சோகங்களை எல்லாம் இன்பங்களாக மாற்றினாள். என் கல்லூரி காலம் நன்றாக சென்று கொண்டிருந்தது... அப்போது தான் என் அண்ணாவிற்கு திருமணம் ஆனது... என் அண்ணியும் நானும் நண்பர்கள் போல பழகி வந்தோம். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல எங்களது உறவிலும் விரிசல் உண்டாக ஆரம்பித்தது... அந்த விரிசலுக்கு காரணம் எங்கள் வீட்டு வேலைக்கார பெண்.. என்னிடமும் என் அண்ணியிடமும் மாறி மாறி பேசி எங்களது உறவை கெடுத்துவிட்டார்...

ஆறுதல் ஏது?

ஆறுதல் ஏது?

அந்த விரிசல் பெரிதானது.. என் அண்ணி என்னை முழுமையாக வெறுக்க ஆரம்பித்தார். அவரும் நானும் ஒரே வீட்டில் இருந்தாலும் கூட பேசிக்கொள்ளாமல் இருக்கும் நிலை உருவானது.. நாட்கள் செல்லசெல்ல என் அண்ணாவும் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். நான் என் சொந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டேன்... எனக்கு ஆறுதலாக இருந்தது எல்லாம் என் கல்லூரி வாழ்க்கையும் என் கல்லூரி நண்பர்களும் மட்டும் தான்...!

என் காதலன்

என் காதலன்

அப்போது தான் என் வாழ்க்கையில் வந்தான் ஒருவன்.. அவன் என்னை நான்கு வருடங்களாக காதலிக்கிறேன் என்று தொல்லை செய்து கொண்டு வந்தவன்... அவன் மீது நான்கு வருடங்களாக் துளியும் காதல் துளிர்க்கவில்லை.. ஆனால் எனக்கு அந்த தனிமையான சூழ்நிலையில் ஒரு துணை தேவைப்பட்டது. அதனால் தான் நான் ராகுல் என்பவனை என் மனதிற்குள்ளேயே காதலிக்க தொடங்கினேன்.. என் காதலை அவனிடம் வெளிப்படுத்தும் நாளுக்காக நான் காத்திருந்த போது தான் எனக்கு ஒரு அதிர்ச்சி கிடைத்தது..

ஏமாற்றம்

ஏமாற்றம்

அவன் என்னை மட்டும் காதலிக்கவில்லை.. மேலும் சில பெண்களையும் தான் காதலிக்கிறான் என்பதை என் தோழி ரீதா கூறினாள். அவள் சொன்ன செய்தி உண்மை தான் என்பதை நானும் உறுதி செய்து கொண்டேன். என் குடும்பத்தில் உண்டான வலியை குறைக்க நினைத்தேன் ஆனால் என் வலி இரண்டு மடங்கானது.. ஆனால் இந்த வலிகளை எல்லாம் தாண்டி என் தோழி ரீதாவின் உதவுடன் மீண்டு வந்து விட்டேன்..

புதிய வேலை

புதிய வேலை

என் கல்லூரி காலம் முடிந்தது.. எனக்கு ஆறுதலாக இருந்த அந்த கல்லூரி காலத்தையும் கடந்து விட்டேன்...! எனக்கு ஒரு பெரிய MNC-யில் வேலை கிடைத்தது. என் தந்தையும் என்னை வேலைக்கு செல்ல அனுமதித்து விட்டார். ஆனால் எனக்கு வேலை கிடைத்தது பெங்களூரு என்பதால் நான் விடுதியில் தங்கி தான் வேலைக்கு செல்ல வேண்டும். என் தந்தையும் நானும் விடுதி பார்த்து, நான் தங்கி வேலை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய பெங்களூரு சென்று விட்டோம். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு அடுத்த நாள் வீடு திரும்பி வந்த பார்த்த போது எங்கள் வீட்டு நாய்க்கு கூட சாப்பாடு வைக்கப்படவில்லை... வீட்டில் எந்த வேலையும் ஆகவில்லை..

 கொடுமை செய்த அண்ணி

கொடுமை செய்த அண்ணி

என் அண்ணியிடம் அப்பா ஏன் எந்த வேலையும் செய்யவில்லை என்று கேட்டார்... என் அண்ணி திமிராக நான் எதையும் செய்ய மாட்டேன்.. நான் உங்க வீட்டுக்கு வந்த வேலைக்காரி எல்லாம் இல்லை என்று கூறிவிட்டார். மேலும் என் அண்ணியின் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொருப்பையும் என் தலையில் சுமத்திவிட்டார். என் அப்பாவிற்கு இதய நோய் உள்ளது அவரை பார்த்து கொள்ள வேண்டிய கடமையும் எனக்கு இருந்ததால் என்னை அப்பா வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார். நான் சூழ்நிலை புரிந்து சரி என்று சொல்லிவிட்டேன்.

தனிமையில் வாடினேன்

தனிமையில் வாடினேன்

இரண்டு வருடங்களாக படித்து முடித்துவிட்டு வீட்டில் தான் இருந்தேன்... என் அண்ணியின் குழந்தைகள் மட்டுமே எனக்கு இருந்த ஒரே ஆதரவு... ஆனால் அதுவும் நீடிக்கவில்லை.. அந்த குழந்தைகள் வளர்ந்து விட்டதால் என் உதவி தேவைப்படாமல் போகவே, என் அண்ணி குழந்தைகளையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டார்... இன்னும் அதிகமாக தனிமைப்படுத்தப்பட்டேன்...

மாப்பிள்ளைகள்

மாப்பிள்ளைகள்

எனக்கு என் அப்பா மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். அப்போது தான் எனக்கு பார்த்த மாப்பிள்ளைகள் எல்லாம் 100 சவரன் நகை வேண்டும் 200 சவரன் நகை வேண்டும் என்று கேட்டார்கள்.. என் அப்பாவும் சரி என்று கூறினார்.. ஆனால் என் அண்ணி, இருப்பதை எல்லாம் உங்க மகளுக்கே கொடுத்து விட்டால், நாங்கள் என்ன செய்வது என்று கேட்டு என் அப்பாவுடன் சண்டைக்கு வந்தார். எனக்கு என்னாடா நம்ம வாழ்க்கை இப்படி இருக்கிறதே என்று ஆகிவிட்டது.. எனக்கு திருமணமே வேண்டாம் என்றானது....

திருவிழா

திருவிழா

அப்போது தான் நாங்கள் திருவிழாவிற்காக எங்களது சொந்த ஊர் திருநெல்வேலிக்கு சென்றோம். அங்கு தான் என் அத்தை மகன் முத்துவை சந்தித்தேன்... அவனுடன் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை... அவனுடைய தம்பிகள் தான் என்னுடன் பேசினார்கள்... நல்ல குடும்பம் என தெரிந்தது... திருவிழா எல்லாம் முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வந்தோம்... மீண்டும் எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்... யாரும் என்னை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரியவில்லை. அனைவரும் நான் கொண்டு வரப்போகும் நகைகளையும் பணத்தையும் தான் விரும்பினார்கள்...

ஏன் இந்த காதல்...

ஏன் இந்த காதல்...

யாரையோ திருமணம் செய்து கொள்வதற்கு நான் ஏன் என் அத்தை மகனையே திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தோன்றியது... அவன் காசு பணத்தை எதிர்பார்க்கிறவன் இல்லை என்று தோன்றியது... என் அப்பாவிடம் அவனை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசினேன்... என் அப்பா முதலில் உனக்கு படித்த நல்ல வேலையில் இருக்கும் பையனை தான் திருமணம் செய்து வைப்பேன் என்று கூறினார். அதன் பின்னர் அவரிடம் நான் ஏன் என் அத்தை மகனை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன் என்பது பற்றியும் கூறினேன்.. என் அப்பா ஒப்புகொண்டார்...

அவனது பாசம்

அவனது பாசம்

நாங்கள் இந்த முறையும் திருவிழாவிற்காக சென்றோம்.... அப்போது என் அப்பா ஜாடையாக எனக்கும் அவனுக்கும் நடக்கும் திருமணம் பற்றி அவரது வீட்டில் பேசினார்... முத்துவிற்கும் என்னை பிடித்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்... நீண்ட வருடங்கள் கழித்து நான் அவனுடன் என் மனம் திறந்து பேசினேன்... எனக்கு அவனை பிடித்திருந்தது.. சென்னை வந்ததும் என் அப்பா முன்னாலேயே அவனுடன் போனில் பேச ஆரம்பித்தேன்.. அவனுக்கு என்னை பிடித்திருக்கிறது என்பது புரிந்தது... ஆனால் காதலை இருவரும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை.. காரணம் எனக்கு இவனை திருமணம் செய்து வைப்பார்களா என்ற ஒரு சந்தேகம் உள்ளது. அவனை காதல் என்ற பெயரில் ஏமாற்றிவிடக் கூடாது என்று தோன்றுகிறது... அதனால் தான் நான் எதை பற்றியும் கூறவில்லை....

குடும்ப பிரச்சனை

குடும்ப பிரச்சனை

அவனை நான் திருமணம் செய்து கொள்வதில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. என் மாமாக்களின் குடும்பம் தான் நான் திருமணமாகி சென்றவுடன் என் அப்பாவிற்கு இங்கே இருக்கும் ஒரே ஆதரவு... ஆனால் என் மாமாக்களின் குடும்பத்திற்கும், முத்துவின் குடும்பத்திற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பெரிய பிரச்சனை.. பலமுறை பலர் சமாதனமாக போங்கள் என்று சொல்லியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை...

என் அப்பாவின் ஆதரவு

என் அப்பாவின் ஆதரவு

என் மாமாக்கள் இன்றி என் திருமணம் கண்டிப்பாக நடக்காது. சரி முத்துவின் குடும்பமும் என் மாமாக்களின் குடும்பமும் எப்போதுதாவது சந்தித்து பேசிக்கொள்ள சூழல் உள்ளதா என்று பார்த்தால், அவர்கள் இருவரும் ஒன்றாக சேர வாய்ப்பே இல்லை... இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு குடும்பங்களையும் எப்படி ஒன்று சேர்ப்பது? இது மட்டுமே என் காதலில் உள்ள பிரச்சனை இல்லை... இன்னொரு பெரிய பிரச்சனையும் உள்ளது...

படிக்காதவன்

படிக்காதவன்

நான் எம்.இ வரை படித்து இருக்கிறேன்.. ஆனால் அவனோ 7 ஆம் வகுப்பு பெயில் ஆனாவன். எங்களது திருமணத்திற்கு என் அண்ணா, மாமாவின் குடும்பம் எப்படி ஒப்புக்கொள்ளும்? என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை... முத்து ஒரு மளிகை கடை வைத்திருக்கிறான்.. என்னை அன்பாக பார்த்துக் கொள்வான். எனக்கு சொத்து எல்லாம் முக்கியமில்லை. என்னை காலம் முழுவதும் நன்றாக பார்த்துக்கொண்டால் போதுமானது....

பதில் கூறுங்கள்...!

பதில் கூறுங்கள்...!

என் காதல் சேருமா? சேராதா? நான் செய்வது சரியா ? தவறா? இதை பற்றி எல்லாம் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை... எங்கள் காதல் சேர ஏதேனும் வழி இருக்கிறதா...? உங்களது கருத்தை கூறுங்கள்...!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: I have lots of problems in my love what can i do

My Story: I have lots of problems in my love what can i do