எடையை குறைக்க உதவும் தினை அவல் கஞ்சி - எப்படி செய்றது-ன்னு பாத்து தினமும் குடிங்க!

Posted By:

Weight Loss Thinai Aval Kanji Recipe In Tamil: தற்போது உடல் பருமனால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைக்க பலர் டயட்டில் இருப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். நீங்களும் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா?

அதுவும் உங்களின் டயட்டில் எந்த உணவுகளும் சுவையில்லாமல் தான் இருக்குமா? அப்படியானால் கஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் தினை அவல் கஞ்சியை தயாரித்து தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்கும்.

Weight Loss Kanji How To Make Thinai Aval Kanji Recipe

அதுவும் இந்த கஞ்சியுடன் கேரட், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் போன்றவை சேர்க்கப்படுவதால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக இந்த கஞ்சி சட்டென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த தினை அவல் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தினை அவல் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தினை அவல் - 1 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் ஸ்வீட் கார்னை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் தினை அவலை சேர்த்து நன்கு கிளறி, அவல் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, வேக வைக்க வேண்டும்.
* நீர் முற்றிலும் வற்றியதும், அதில் இன்னும் சிறிது சுடுநீரை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான தினை அவல் கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 2, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion