ஈஸியான மற்றும் சுவையான... வெண்டைக்காய் சாம்பார்

வெண்டைக்காயை நாம் பலவாறு சமைக்கலாம். அதுவும் வெண்டைக்காயைக் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இந்த சாம்பாரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Posted By:

காய்கறிகளுள் வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடலாம் அல்லது வேறு விதமாக சமைத்தும் சாப்பிடலாம். வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதில் குறிப்பாக கூற வேண்டுமானால், செரிமானம் மேம்படும், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும், கண்களுக்கு நல்லது, சருமத்திற்கு நல்லது, உடல் பருமனைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது மற்றும் சிறுநீரக நோயைத் தடுக்கும்.

Vendakkai Sambar Recipe In Tamil

இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய வெண்டைக்காயை நாம் பலவாறு சமைக்கலாம். அதுவும் வெண்டைக்காயைக் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இந்த சாம்பாரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். முக்கியமாக வெண்டைக்காய் சாம்பார் பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமாக இருக்கும். உங்களுக்கு வெண்டைக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1/2 கப்

* தக்காளி - 1 (நறுக்கியது)

* வெண்டைக்காய் - 12-15

* சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

* புளிச்சாறு - 1/4 கப்

* தண்ணீர் - தேவையான அளவு

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 8 (நறுக்கியது)

* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவிக் கொண்டு, துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். பின் வெண்டைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு நிறம் மாறி பிசுபிசுப்புத்தன்மை நீங்கும் வரை நன்கு வதக்க வேண்டும். பிசுபிசுப்புத்தன்மை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு வெண்டைக்காயை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அடுப்பில், குக்கரை வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும்.

* பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் வதக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின் அதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* வெண்டைக்காய் நன்கு வெந்ததும் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்கவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார்.

குறிப்பு:

* சாம்பாரானது மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் நீராகவோ இருக்கக்கூடாது. இடைப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.

* சாம்பார் பொடியை காய்கறிகளை வதக்கும் போது சேர்த்தால், ப்ளேவர் இன்னும் அற்புதமாக இருக்கும்.

* இந்த சாம்பாருடன் எந்த காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* ஒருவேளை உங்களுக்கு சாம்பாரின் காரம் குறைவாக இருப்பது போன்று இருந்தால், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Story first published: Monday, November 28, 2022, 13:45 [IST]
Desktop Bottom Promotion