தட்டுக்கடை ஸ்டைல் பொட்டுக்கடலை சட்னி - எப்படி ஈஸியா 5 நிமிடத்தில் செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Thattu Kadai Style Pottukadalai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு சாம்பாரை விட சட்னியைத் தான் அதிகம் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை தட்டுக்கடை ஸ்டைல் பொட்டுக்கடலை சட்னியை செய்யுங்கள்.

இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இட்லியுடன் ஊற்றி நன்கு குலைத்து உட்கொண்டால், வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் இட்லியை சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு இருக்கும். இந்த சட்னியை பேச்சுலர்களும், வேலைக்கு செல்பவர்களும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

Thattu Kadai Style Pottukadalai Chutney How To Make a Pottukadalai Chutney

உங்களுக்கு தட்டுக்கடை ஸ்டைல் பொட்டுக்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டுக்கடை ஸ்டைல் பொட்டுக்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 6
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலி சூட்டில் பொட்டுக்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்து குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து, அத்துடன் பொட்டுக்கடலையையும் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேங்காய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, நீர்ச்சட்னி என்பதால் அதில் சற்று அதிகமாகவே நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தட்டுக்கடை ஸ்டைல் பொட்டுக்கடலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 24, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion