இடியாப்பத்துக்கு அருமையாக இருக்கும்... சேலம் தக்காளி குருமா

Posted By:

Salem Tomato Kurma: தினமும் இரவு இட்லி, தோசை, சப்பாத்தி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று இரவு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இடியாப்பம் செய்து கொடுங்கள். இந்த இடியாப்பத்திற்கு எப்போதும் தேங்காய் பாலை தான் நீங்கள் செய்திருப்பீர்கள்.

ஆனால் அந்த இடியாப்பத்திற்கு தக்காளி குருமா இன்னும் அட்டகாசமாக இருக்கும். அதுவும் சேலம் தக்காளி குருமா செய்தால் அருமையாக இருக்கும். சேலம் தக்காளி குருமாவானது இடியாப்பத்திற்கு மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

Salem Tomato Kurma Recipe In Tamil

முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகளுக்கும் இந்த தக்காளி குருமா மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குருமாவை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு சேலம் தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேலம் தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 4
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு பல் - 5
* இஞ்சி - 1/2 இன்ச்
* பச்சை மிளகாய் - 1
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் தக்காளிகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் வெங்காயத்தையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள சோம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பைத் தூவி வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 முதல் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சேலம் தக்காளி குருமா தயார்.

Image Courtesy: chitrasfoodbook

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 25, 2023, 16:11 [IST]
Desktop Bottom Promotion