1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. வீடே மணக்குற அளவு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்..

Posted By:

Pakoda Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1/2 கப் பாசிப்பருப்பு இருந்தால், அதைக் கொண்டு பக்கோடா கிரேவி செய்யுங்கள். இந்த பக்கோடா கிரேவி சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பக்கோடா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பக்கோடா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Pakoda Gravy How To Make a Simple And Easy Pakoda Gravy Recipe

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வரமிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கிரேவிக்கு...

* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 2 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* வெங்காயம் - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, பின் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, நீரை வடிகட்டிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வரமிளகாய், சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, சிறிது நீரைத் தெளித்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பக்கோடாக்களாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக குறைவான தீயில் வைத்து வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உயர் தீயில் வைத்து, எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக செய்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கிளறி, 3 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பக்கோடா கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 28, 2025, 16:44 [IST]
Desktop Bottom Promotion