அடுத்தமுறை பச்சை பட்டாணி வாங்குனா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Pachai Pattani Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பச்சை பட்டாணி வாங்குவீர்களா? பச்சை பட்டாணி வாங்கினால் அதைக் கொண்டு கிரேவி தான் பெரும்பாலும் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை கிரேவி செய்யும் போது சற்று வித்தியாசமாக செய்யுங்கள்.

அதாவது பச்சை பட்டாணியை ஒருசில பொருட்களுடன் சேர்த்து அரைத்து வேக வைத்து, பின் கிரேவி செய்து பாருங்கள். சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். இப்படி செய்யும் பட்டாணி கிரேவி, சப்பாத்தி, சாதம், தோசை, இட்லி போன்ற அனைத்துடனும் சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.

Pachai Pattani Gravy How To Make a Green Peas Gravy

உங்களுக்கு பச்சை பட்டாணி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பட்டாணி - 100 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

கிரேவிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 3
* அன்னாசிப்பூ - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (அரைத்தது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கடலை மாவு, சிறிது உப்பு மற்றும் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பட்டாணியை போட்டு பரப்பி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வேக வைத்த பட்டாணியை கத்தியால் வெட்டி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அரைத்த வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி குறைவான தீயில் வைத்து 1 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, 7 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கசூரி மெத்தியை தூவி கிளறி இறக்கினால், சுவையான பச்சை பட்டாணி கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, February 8, 2025, 22:50 [IST]
Desktop Bottom Promotion