மீல் மேக்கருடன் உருளைக்கிழங்கை சேர்த்து ஒருவாட்டி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...

Posted By:

Mealmaker Potato Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? இப்படி ஒரே சுவையில் சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் மீல்மேக்கரும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Mealmaker Potato Gravy How To Make a Mealmaker Potato Gravy Recipe

உங்களுக்கு மீல்மேக்கர் உருளைக்கிழங்கு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் உருளைக்கிழங்கு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மீல்மேக்கர் - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)

அரைப்பதற்கு...

* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 7 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (அரைத்து கொள்ளவும்)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீல்மேக்கரை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, மீல் மேக்கரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சுத்தமான நீரை ஊற்றி அலசி, மீல்மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு மிளகாய் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி, பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடம் ப்ரை செய்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி, 80 சதவீதம் வேக வைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு நீர் வற்றி பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிப்பில்லாத தயிரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் ப்ரை செய்து வைத்துள்ள மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை பிரட்டி விட்டு, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லித் தூவி இறக்கினால், சுவையான மீல்மேக்கர் உருளைக்கிழங்கு கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 6, 2025, 21:30 [IST]
Desktop Bottom Promotion