இட்லிக்கு ஒருடைம் கும்பகோணம் கடப்பாவை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...

Posted By:

Kumbakonam Kadappa Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி என்றாலே சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? ஆனால் அடுத்தமுறை கும்பகோணம் கடப்பாவை செய்யுங்கள். இட்லிக்கு இந்த கும்பகோணம் கடப்பாவை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். ஒருமுறை இந்த கடப்பாவை செய்தால், பின் அடிக்கடி செய்யச் சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு கும்பகோணம் கடப்பாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கும்பகோணம் கடப்பா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kumbakonam Kadappa How To Make a Kumbakonam Kadappa For Idli

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* பாசிப்பருப்பு - 1/4 கப்
* உருளைக்கிழங்கு - 2
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 4-6
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 6-8
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* பச்சை மிளகாய் - 2-3
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் குக்கரில் பாசிப்பருப்பு கழுவி சேர்த்து, அத்துடன் 2 உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான கும்பகோணம் கடப்பா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 11, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion