சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... காஷ்மீரி ஸ்டைல் பன்னீர் கிரேவி

Posted By:

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி அல்லது நாண் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் அட்டகாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இன்று காஷ்மீரி ஸ்டைல் பன்னீர் கிரேவியை செய்து கொடுங்கள். இந்த பன்னீர் கிரேவி சாப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, குல்சா, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

முக்கியமாக இந்த பன்னீர் கிரேவி வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியான செய்முறையைக் கொண்டது. மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு காஷ்மீரி ஸ்டைல் பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Kashmiri Paneer Gravy Recipe In Tamil

கீழே காஷ்மீரி ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 250 கிராம்

* தக்காளி - 5 (அரைத்து கொள்ளவும்)

* காஷ்மீரி வரமிளகாய் - 2

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

* சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு தூள் - 2 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி தூள்/சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* நெய் - 1 டீஸ்பூன்

* பிரியாணி இலை - 1

* கருப்பு ஏலக்காய் - 2

* பச்சை ஏலக்காய் - 4

* பட்டை - 1 துண்டு

* எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் பன்னீரை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, மஞ்சள் கலந்த சுடுநீரில் போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் பன்னீர் ரப்பர் போன்று இல்லாமல், பஞ்சு போன்று இருக்கும்.

* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேரத்து, மிளகாய் தூள் மற்றும் இஞ்சி தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் சோம்பு தூளை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் பன்னீர் துண்டுகுளை சேர்த்து, கரம் மசாலா மற்றும் நெய் ஊற்றி கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான காஷ்மீரி ஸ்டைல் பன்னீர் கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 5, 2023, 14:37 [IST]
Desktop Bottom Promotion