கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க!

Posted By:

Karnataka Style Puliyodharai Recipe in Tamil: பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடும் பிரதான மதிய உணவாக இருப்பதும், சுற்றுலா செல்வதென்றால் முதலில் பேக் செய்வதும் புளி சாதத்தைதான். இதற்கு காரணம் அதன் சுவையும், அது செய்வதில் உள்ள எளிமையும்தான். ஆனால் ஒரே மாதிரியான புளி சாதத்தை எத்தனை நாட்கள்தான் செய்து கொண்டிருப்பது. பெரியவர்களை விட குழந்தைகள் உணவு விஷயத்தில் விரைவில் சலிப்படைந்து விடுவார்கள்.

எனவே புளி சாதத்தையே வேறு விதத்தில் செய்து கொடுப்பது சலிப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றும். கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் செய்வது மிகவும் எளிதாகவும், புதிய சுவையாகவும் இருக்கும். இந்த உணவு கர்நாடகா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். அங்குள்ள அனைத்து கடைகளிலும் இது பிரதானமாக கிடைக்கும்.

Karnataka Style Puliyodharai Recipe How to Make Karnataka Style Puliyodharai

உங்களுக் சுவையான கர்நாடகா ஸ்டைல் புளி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் புளி சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 கப் சமைத்த சாதம்
- பெரிய நெல்லிக்காய் அளவு புளி
- 1 ஸ்பூன் வெல்லம்
- ½ ஸ்பூன் வறுத்த வெள்ளை எள் பொடி
- ½ ஸ்பூன்மஞ்சள் தூள்
- தேவையான அளவு - உப்பு
- தேவையான அளவு - தண்ணீர்
- ஒரு கைப்பிடி துருவிய காய்ந்த தேங்காய்

வறுத்து அரைக்க:

- 4 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ½ ஸ்பூன் சீரகம்
- ஒன்றரை ஸ்பூன் தனியா
- ¼ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- 5 வர மிளகாய்
- 5 காஷ்மீரி மிளகாய்

தாளிக்க:

- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன்உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- ¼ கப் வறுத்த வேர்க்கடலை
- சிறிதளவு கறிவேப்பிலை
- ½ ஸ்பூன் பெருங்காயம்

செய்முறை:

- ஒரு கப் நீரில் புளியை ஊறவைத்து, அதிலிருந்து சாறு பிழிந்து எடுத்து அதை தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வறுத்து, ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துப் பொரியவிடவும்.

- மற்றொரு பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி, அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கலவை கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

- கலவை கெட்டியாகத் தொடங்கும்போது, ​​வெல்லம் மற்றும் அரைத்த பொடியைச் சேர்க்கவும்.

- பின்னர் எண்ணெய் பிரிந்து வரும் வரை, சில நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு கெட்டியான பசை போன்ற நிலைக்குக் கொண்டு வரவும். புளியோதரை மசாலா இப்போது ரெடி.

- ஒரு தட்டில், சமைத்து ஆறவைத்த சாதத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் புளியோதரை மசாலா, வறுத்த எள் பொடி மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- ஒரு கரண்டியைப் பயன்படுத்தி மசாலாவை சாதத்துடன் நன்றாக கிளறவும். சுவையைச் சரிபார்த்து தேவைப்பட்டால் இன்னும் சிறிது மசாலா சேர்த்துக்கொள்ளலாம்.

- அவ்வளவுதான் சூப்பரான கர்நாடகா ஸ்டைல் புளிசாதம் ரெடி. காரமான சட்னி மற்றும் அப்பளம் இதற்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 2, 2026, 13:25 [IST]
Desktop Bottom Promotion