கையேந்தி பவன் இட்லி குருமா - சிம்பிளா எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?

Posted By:

Kaiyenthi Bhavan Idli Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமாக சைடு டிஷ் செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சட்னி சாப்பிட்டு போரடித்துவிட்டால், குருமாவை செய்து கொடுங்கள். அதுவும் கையேந்தி பவன் ஸ்டைல் இட்லி குருமாவை செய்யுங்கள். இந்த இட்லி குருமாவை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குருமா செய்வற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Kaiyenthi Bhavan Idli Kurma How To Make a Potato Kurma Recipe

உங்களுக்கு கையேந்தி பவன் இட்லி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் இட்லி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 6
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 4
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 சிறிய மூடி
* தண்ணீர் - சிறிது

குருமாவிற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறி மசாலா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய 2 வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரி, பொட்டுக்கடலை, கசகசா மற்றும் சோம்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, அதில் துருவிய தேங்காயை சேர்த்து, வாணலியின் சூட்டில் வறுக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்கள் குளிர்ந்த பின், மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கறி மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை ஒன்றிரண்டாக மசித்து சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமாவில் உள்ள பச்சை வாசனை போனதும், அடுப்பை அணைத்துவிட்டு, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கையேந்தி பவன் இட்லி குருமா தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion