ஹைதராபாத் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி... இந்த ஒரு குருமா போதும்... எல்லாத்துக்கும் சூப்பர் சைடிஷா இருக்கும்..

Posted By:

Hyderabad Potato Kurma Recipe in Tamil: ஹைதராபாத் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பிரியாணிதான். நீளமான பாசுமதி அரிசியில் செய்யப்படும் இந்த காரசாரமான பிரியாணிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். ஆனால் ஹைதராபாத்தில் வேறு சில சுவையான உணவுகளும் உள்ளன. அப்படி ஹைதராபாத்தில் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றுதான் இந்த உருளைக்கிழங்கு குருமா.

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உருளைக்கிழங்கு பிரியர்களா? உருளைக்கிழங்கை அடிக்கடி உங்கள் வீட்டில் சமைப்பீர்களா? ஆம் எனில், அவர்களுக்கு இந்த ஹைதராபாத் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமாவை ஒரு முறை செய்து கொடுங்கள். இந்த குருமா நெய் சோறு, புலாவ், பிரியாணி போன்றவற்றுக்கு மட்டுமின்றி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும் அருமையாக இருக்கும். சொல்லப்போனால் இந்த குருமா சிக்கன், மட்டன் குருமாவை விட சுவையில் பின்னியெடுக்கும்.

Hyderabad Potato Kurma Recipe How to Make Hyderabad Potato Kurma

உங்களுக்கு இந்த அட்டகாசமான ஹைதராபாத் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் உருளைக்கிழங்கு குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 4 நறுக்கிய உருளைக்கிழங்கு
- 3 ஸ்பூன் எண்ணெய்
- ஒன்றரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- அரை கப் நறுக்கிய தக்காளி
- ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 கீறிய பச்சை மிளகாய்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- கால் ஸ்பூன் சோம்பு பொடி
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
- புதினா 1 கொத்து
- உப்பு தேவையான அளவு

அரைக்க:

- அரை கப் கெட்டி தயிர்
- அரை கப் துருவிய தேங்காய்
- 8 முந்திரி

தாளிக்க:

- ½ ஸ்பூன் சீரகம்
- 2 ஏலக்காய்
- 1 அன்னாசி பூ
- 1 இன்ச் பட்டை
- 4 கிராம்பு
- 1 பிரியாணி இலை

செய்முறை:

- முதலில் குருமாவிற்கான விழுது தயாரிக்க ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் முந்திரி சேர்க்கவும். பின்னர் கெட்டி தயிர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.

- உருளைக்கிழங்கை நறுக்கி மூழ்கும் அளவில் தண்ணீர் போட்டு முக்கால் பதம் வேகும் வரை கொதிக்க வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும், தீயைக் குறைத்து, அனைத்து முழு பிரியாணி இலை, அன்னாசி பூ, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் சீரகத்தை ஒவ்வொன்றாக வரிசையாக போடவும்.

- சீரகம் பொரியத் தொடங்கியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

- வெங்காயம் வதங்கிய பின், ​​தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.

- பின்னர் இஞ்சி பூண்டு விழுதாய் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தக்காளி முற்றிலும் மென்மையாகி, வெங்காயத்துடன் நன்கு கலக்கும் வரை வதக்கவும்.

- அடுத்து புதினாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர் கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் சோம்பு பொடி சேர்க்கவும். மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.

- தேங்காய் விழுது நன்கு கொதித்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

- பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைக்கவும். உருளைக்கிழங்கு முழுமையாக வெந்து, எண்ணெய் மேலே வரும் வரை மூடி வைத்து சமைக்கவும்.

- இறுதியாக கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான ஹைதராபாத் உருளைக்கிழங்கு குருமா ரெடி.

- இதை சூடான தோசை, சப்பாத்தி அல்லது புலாவுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, January 7, 2026, 16:52 [IST]
Desktop Bottom Promotion