வீட்டுல காய் எதுவும் இல்லையா? 3 தக்காளி, 1 வெங்காயம் இருந்தா போதும்.. அட்டகாசமான சாம்பார் செய்யலாம்..!

Posted By:

Tomato Sambar Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? நிறைய பேருக்கு இட்லி, தோசைக்கு சட்னிக்கு பதிலாக, சாம்பார் தொட்டு சாப்பிட ரொம்பவும் பிடிக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி என்றால், இன்று தக்காளியைக் கொண்டு சுவையான சாம்பார் செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

இந்த சாம்பார் செய்வதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை. வெறும் வெங்காயம், தக்காளி இருந்தாலே போதுமானது. இந்த தக்காளி சாம்பாரை வீட்டில் செய்தால், ஒரு தோசை, 1 இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சாம்பார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்யும் வகையில் ஈஸயாக இருக்கும்.

How To Prepare Tomato Sambar Recipe

உங்களுக்கு தக்காளி சாம்பாரை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* வரமிளகாய் - 3
* தேங்காய் - 1/4 கப்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1/4 இன்ச்

பிற பொருட்கள்...

* துவரம் பருப்பு - 1/2 கப்
* தக்காளி - 3
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய், தேங்காய், கசகசா, பொட்டுக்கடலை, சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, 1/2-1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள பருப்பு மற்றும் தக்காளியை நன்கு மசித்து, அதையும் சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தக்காளி சாம்பார் தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Monday, October 9, 2023, 13:32 [IST]
Desktop Bottom Promotion